ஊட்டி: ஊட்டியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்ட நிலையில், அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நீலகிரி மாவட்டம் ஊட்டி ஹெச்.பி.எஃப் அருகே 45 ஏக்கரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.கடந்த 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, மருத்துவக் கல்லூரி 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு, இயங்கி வருகிறது. நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
அதிமுக ஆட்சி காலத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதிமுகவின் திட்டத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார் என அதிமுகவினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிமுகவினர் மருத்துவமனை திறக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். ஊட்டி காபி ஹவுஸ் சந்திப்பில் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் தலைமையில் முன்னாள் எம்.பி. கே.ஆர்.அர்ஜூணன், மாவட்ட துணை செயலாளர் வி.கோபாலகிருஷ்ணன், நகர செயலார் சண்முகம் மற்றும் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.