ஊட்டி நகரில் திரியும் கால்நடைகள் கூட்டம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

2 weeks ago 4

ஊட்டி: ஊட்டி நகரில் சுற்றி திரியும் குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி முக்கிய சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இங்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக ஊட்டி நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலா பயணிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரும் இடையூறாக உள்ளது. நகருக்குள் உலா வரும் இவைகள் முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் சுற்றி திரிகின்றன.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதேபோல் குதிரை சவாரிக்காக கொண்டு வரப்படும் குதிரைகளையும் பயன்படுத்திய பின்னர் அனாதையாக நகரில் விட்டு விடுகின்றனர். இவை அவ்வப்போது சாலைகளில் தறிகெட்டு ஓடி சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. நகரில் சுற்றி திரியும் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். நகரில் சுற்றி திரியும் குதிரைகளின் உரிமையாளர்கள் யாரேன்றே தெரியாத நிலையில் அவைகளை பிடித்து அபராதம் விதிக்கவும், அப்புறப்படுத்தவும் முடியாத சூழல் இருந்து வருகிறது.

இதனிடையே தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் ஊட்டிக்கு இ-பாஸ் சுற்றுலாப் பயணிகள் வருகை பெற துவங்கியுள்ளனர். கூடலூர் சாலை, பஸ் நிலையப் பகுதி, மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மாடுகள், குதிரைகள் உள்ளிட்டவைகள் சாலையிலேயே உலா வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்களும் அவ்வப்போது ஏற்படுகின்றன. எனவே கோடை சீசன் களைகட்டும் முன் ஊட்டி நகரில் சுற்றித் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post ஊட்டி நகரில் திரியும் கால்நடைகள் கூட்டம்: வாகன ஓட்டிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article