சென்னை: ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்றும், வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்களையும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மறு ஆய்வு மனு எண்ணிடப்படாததால் விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இந்நிலையில், இந்த மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் முறையிட்டார். இதைக் கேட்ட நீதிபதிகள், செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். மேலும், உயர் நீதிமன்றம் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதித்துள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
The post ஊட்டி, கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கே கட்டுப்பாடு: சுற்றுலா பயணிகளுக்கு இல்லை: ஐகோர்ட் appeared first on Dinakaran.