*நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்
ஊட்டி : ஊட்டி ஏரியின் நுழைவுவாயில் பகுதியில் ரூ.7.51 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்த தூர்வாறும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்படும். சிறப்பு தானியங்கி இயந்திர அமைப்பு மூலம் கழிவுகள் குவிவது தடுக்கப்படும்.
இதனால், ஏரியின் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் நகரின் மத்தியில் ஊட்டி ஏரி அமைந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கிய ஏரியாக விளங்கி வந்த இங்கு படகு சவாரி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் காலபோக்கில் ஊட்டி நகரில் ஒடும் கழிவு நீர் அனைத்தும் ஏரியில் கலந்தது. இதனையடுத்து தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுபாட்டில் உள்ள படகு இல்லம் மூலம் படகு சவாரிக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஊட்டி ஏரிக்கு வரும் தண்ணீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக வருகிறது. இந்த கால்வாய் நகரின் மையப்பகுதியில் செல்கிறது. கால்வாயின் இருபுறமும் உள்ள ஓட்டல்கள், குடியிருப்புகள், லாட்ஜ்கள் உள்ளன.
இவைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கால்வாயில் நேரடியாக திறந்து விடப்பட்டன. அதிலும் மழைக் காலங்களில் கால்வாயில் மண் மற்றும் வண்டல் படிமங்கள் வெள்ள நீருடன் சேர்ந்து ஏரியை வந்தடைகிறது.
இதனால், முகத்துவாரத்தில் மண் திட்டுகள் உருவாகி மாசடைகிறது. 1992ம் ஆண்டு 0.989 மில்லியன் கன மீட்டராக இருந்த ஏரியின் கொள்ளளவு தற்போது 0.691 மில்லியன் கன மீட்டராக குறைந்தது.
ஏரி தூர் வாரப்படாத காரணத்தாலும் ஒவ்வொரு பருவமழைக் காலங்களில் வண்டல் மண் அதிகளவு சேர்ந்து மழைக் காலங்களில் வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து ஊட்டி ஏரியின் நுழைவு வாயில் பகுதியில் குவிந்துள்ள மண் திட்டுகளை அகற்றி தூர்வாரவும், ஏரியை தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
சென்னை அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைைமயில் நீர்வளத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம், நகராட்சி அதிகாரிகள், சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஊட்டி ஏரி மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் மற்றும் நீர் நிறம் மாறுவதற்கான காரணம், ஏரிக்குள் கழிவுகள் வராமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த திட்ட மதிப்பீடு செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தேங்கும் நீரில் எப்போதும் பாசிகள் வளரும். நீர் பச்சை நிறத்திற்கு மாறுவது வழக்கம். அதனால் நீரின் நிறம் மாறியுள்ளதா? அல்லது மாசடைந்துள்ளதால் நிறம் மாறியுள்ளதா? என்பதை ஆராய ஆய்வுக்காக நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.
நீர்நிலைகளை தூய்மைப்படுத்த பல்வேறு தொழில் நுட்பங்கள் உள்ளது. ஊட்டி ஏரியை மேம்படுத்தவும் தூய்மைபடுத்தவும், எந்த மாதிரியான தொழில்நுட்பங்கள் தேவை என்பது எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏரியை தூய்மை செய்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதுதவிர ஏரியின் பரப்பளவு, ஆழம், மழை காலங்களில் ஏரியில் நீர் எந்த அளவிற்கு உயரும் என்பது போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு திட்டம் வகுக்கப்பட்டது. தொடர்ந்து பழமை வாய்ந்த ஊட்டி ஏரியை பாதுகாக்கும் வகையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு துவக்கத்தில் பணிகள் துவங்கின.
முதற்கட்டமாக கோடப்பமந்து கால்வாயில் கோத்தகிரி சாலையில் இருந்து உழவர் சந்தை பகுதி, ஏடிசி., மத்திய பஸ் நிலைய பகுதிகளில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கோடப்பமந்து கால்வாயில் இருந்து வரக்கூடிய தண்ணீர் ஏரிக்குள் நுழையும் நுழைவுவாயில் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பில் மழைக்காலங்களில் அடித்து வரப்படும் பிளாஸ்டிக் மற்றும் இதர திடக்கழிவுகளை நீக்கும் தானியங்கி துப்புரவு இயந்திரம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர், ஏரியின் சூழலியலை காக்க நவீன தொழில் நுட்பத்தில் டிரேட்ஜிங் முறையில் தூர் வாரும் பணிகள் கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.7.51 கோடி மதிப்பீட்டில் துவக்கப்பட்டுள்ளது. மேலும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 700 கன மீட்டர் அளவிற்கு தூர்வாறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் முகத்துவார பகுதியில் உள்ள மண் திட்டுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருளழகன் கூறுகையில், ‘‘ஊட்டி ஏரியை பாதுகாக்கும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கோடப்பமந்து கால்வாய் மற்றும் ஊட்டி ஏரி ஆகியவை தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஏரியின் நுழைவாயில் பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தானியங்கி இயந்திர அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.7.51 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் 90 சதவீதம் அளவிற்கு நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்படும்.
இதன் மூலம் மழைக்காலங்களில் கால்வாயில் அடித்து வரப்படும் கழிவுகள் ஏரியில் கலக்காமல் தானியங்கி முறையில் அகற்றப்படும். இதுதவிர வண்டல் மண் ஏரிக்குள் குவிவதும் தடுக்கப்படும். இதனால், ஏரியின் சுகாதாரம் பாதுகாக்கப்படும்’’ என்றார்.
The post ஊட்டி ஏரியில் ரூ.7.51 கோடியில் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவு appeared first on Dinakaran.