
ஊட்டி,
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கவும், கவரவும் மாவட்டம் நிர்வாகம் சார்பில் கோடைக்காலத்தில் கோடை விழா நடத்தப்படுகிறது.
அதன்படி இந்தாண்டு கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியான காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் தொடங்கி முடிந்துவிட்டது. இதையடுத்து மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதில் மலர் கண்காட்சி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. வருகிற 16-ந் தேதி மலர்கண்காட்சி தொடங்கி 21-ந் தேதிவரை நடத்தப்பட உள்ளது.
இதையொட்டி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மலர் நாற்றுகள் நடும் பணி தொடங்கி முடிந்தது. தற்போது மலர் நாற்றுகள் அடங்கிய பூந்தொட்டிகளை அடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் குறிப்பிடும்படியாக பூங்கா நுழைவு வாயில் பகுதி கதவுகள், பூங்காவில் உள்ள முக்கியமான பொருள்கள் ஆகியவற்றுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடக்கிறது. கண்ணாடி மாளிகையை சரி செய்யும் பணிகள் நடக்கிறது. அத்துடன் மலர் கண்காட்சிக்காக புல் மைதானத்தில் மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
அடுத்த வாரத்தில் மலர் கண்காட்சிக்கான அனைத்து பணிகளையும் முடிக்க முடிவு செய்து இருப்பதாக பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதேபோல் ரோஜா பூங்காவில் வருகிற 10-ந் தேதி ரோஜா கண்காட்சி தொடங்க உள்ளது. அங்கும் கூடாரம் அமைத்தல், மேடை அமைத்தல், அழகுபடுத்துதல், வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது..