திருப்பூர் : திருப்பூர் மாநகரில் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வடக்கு உழவர் சந்தை திருப்பூர் பெருமாநல்லூர் சாலை புதிய பேருந்து நிலையம் பின்புறம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தினந்தோறும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இது மட்டுமல்லாது அதிகாலை நேரத்தில் வியாபாரிகளும் சாலையோரங்களில் கடை அமைத்து காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.
இதனை வாங்கிச் செல்ல திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் அருகிலும், உழவர் சந்தைக்கு அருகேயும் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.
காய்கறிகள் வியாபாரம் போக மீதமாகும் குப்பைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய இந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி ஊழியர்கள் இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
வாகன ஓட்டிகள் அவதி
திருப்பூர் புதிய பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
திருப்பூர் வடக்கு உழவர் சந்தை அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அள்ளபடாமல் உள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் உள்ள ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
The post உழவர் சந்தை அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.