ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்திற்கு ஆதரவாக நாளை மறுதினம் சிஐடியு தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று சிஐடியு தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு, 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் கடந்த ஆண்டு ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம், போனஸ் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 30 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, தொழிலாளர்கள் வழக்கம்போல பணிக்கு திரும்பினர். சிஐடியு சங்கம் பதிவு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், சங்கம் பதிவு செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், தொழிற்சாலையில் பணிபுரியும் சிஐடியு ஊழியர்களை சாம்சங் நிர்வாகம், பல்வேறு நிர்பந்தம் விதித்து வருவதாகவும், ஊழியர்களுக்கு பணியில் அழுத்தம் கொடுத்து பல்வேறு பழிவாங்கல் நடவடிக்கைகளிலும் நிர்வாகம் ஈடுபட்டு வந்ததாக ஊழியர்கள் புகார் கூறுகின்றனர். இந்த விவகாரம், குறித்து கடந்த 31ம்தேதி பணி நேரத்தில் நிர்வாக தலைவரை சந்திக்க ஊழியர்கள் முற்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது.
இதனால், சக தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக பணிகளை புறக்கணித்து தொழிற்சாலை வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, சிஐடியு தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சாலை முன்பு வரும் 13ம்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக சிஐடியு அறிவித்துள்ளது.
அதேபோல, சாம்சங் தொழிற்சாலையில் நடந்து வரும் சட்டவிராத உற்பத்திக்கு எதிராக கிண்டி தொழிற்சாலை தலைமை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்த உள்ளதாகவும், 14ம்தேதி காஞ்சிபுரத்தில் தொழிலாளர்கள் அனைவரும் சாம்சங் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாகவும் சிஐடியு தெரிவித்துள்ளது.
The post உள்ளிருப்பு போராட்டத்தை ஆதரித்து நாளை மறுதினம் சாங்சங் தொழிற்சாலை முன்பு உண்ணாவிரதம் போராட்டம்: சிஐடியு தகவல் appeared first on Dinakaran.