
சென்னை,
தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு தற்செயல் மற்றும் இடைக்கால தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த மாத இறுதியில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்கள், 35 மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 133 காலிபணியிடங்கள், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள 315 காலி பதவிகளுக்கு என மொத்தம் 452 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பும் வெளியிட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.