உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் திரண்ட பக்தர்கள்; கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்: அரவான் களப்பலி-திருநங்கைகள் ஒப்பாரி

2 hours ago 3


உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் அரவான் களப்பலியை தொடர்ந்து திருநங்கைகள் ஒப்பாரி வைத்து தாலி அறுத்து விதவைக்கோலத்துடன் ஊர் திரும்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் 18 நாள் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி சாகை வார்த்தல் மற்றும் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறத்தல் நேற்று மாலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், கோயில் பூசாரி கையால் தாலி கட்டி கொண்டு இரவு முழுவதும் கும்மியடித்து ஆடி, பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து கூவாகம் மற்றும் தொட்டி, பந்தலடி, வேலூர், சிவிலியாங்குளம், கூ.நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட அரச இலை, வின்குடை, புஜங்கள் மற்றும் பிரமாண்ட மாலைகள், மேளதாளம் வாண வேடிக்கையுடன் எடுத்து வந்து தேர் பொருத்தும் பணி நடைபெற்றது.

தொடர்ந்து இன்று காலை சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன், வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் முக்கிய விதிகள் வழியாக தேரை இழுத்து சென்றனர். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் விவசாயிகள், தங்களது நிலங்களில் விளைந்த மாங்காய், கத்திரிக்காய், கம்பு கதிர்கள் உள்ளிட்ட பயிர்களை தேரின் மீது சூறை விட்டு பெரிய, பெரிய கட்டிகளாக கற்பூரத்தை கொட்டி ஏற்றி தங்களது வேண்டுதல் நிறைவேற வழிபட்டனர். தேர், பந்தலடியில் உள்ள தெய்வநாயகம் தோப்பிற்கு சென்றபின் அங்கு அரவான் களப்பலி இடும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது அங்கு திரண்ட திருநங்கைகள், தங்களது கணவராக நினைத்து தாலி கட்டிக் கொண்ட அரவான் களப்பலியானதை கண்டு கண்ணீர் விட்டு அழுதனர். நேற்று கோயிலில் பூசாரி கையால் கட்டிய தாலியை அறுத்தும், வளையல்களை உடைத்தும், பொட்டை அழித்தும் வெள்ளை புடவை உடுத்தி விதவை கோலம் பூண்டு ஒப்பாரி பாடல்கள் பாடி ஓலமிட்டு அழுதனர். இதனால் அந்த பகுதியே சோகத்தில் மூழ்கியது. இரவு முழுவதும் அழகு பதுமைகளாக ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருந்த திருநங்கைகள் அரவான் கள பலிக்கு பிறகு வெள்ளை புடவை உடுத்தி விதவை கோலத்தோடு சோகத்துடன் தங்களது ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

இன்று மாலை பலி சோறு படையல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த சோற்றை குழந்தை பாக்கியம் இல்லாத புதுமண தம்பதி வாங்கி சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்று ஐதீகம் உள்ளதால் அதனை ஏராளமான இளம்பெண்கள் வாங்கி சாப்பிடுவார்கள். பின்னர் காளி கோயிலில் பாரதம் படித்தல் மற்றும் அரவான் உயிர் பெறுதல் நிகழ்ச்சி நடைபெறும். நாளை 15ம் தேதி விடையாத்தியும், 16ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், விழா குழுவினர் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ராஜத் சதுர்வேதி தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தமிழ்நாடு அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

‘மிஸ் வேடந்தவாடி-2025’ அழகியாக புதுச்சேரி ஐஸ்வர்யாராய் தேர்வு: நடிகை நமிதா பங்கேற்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா கடந்த ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. நேற்று திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள், பூசாரி கையால் தாலியை கட்டிக்கொண்டனர். அதேபோல் ‘மிஸ் வேடந்தவாடி 2025’ அழகி போட்டி நடந்தது. நடிகை நமிதா, போட்டியை தொடங்கி வைத்தார். மும்பை, சென்னை, புதுச்சேரி, மேல்மலையனூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் மிஸ் வேடந்தவாடி-2025 ஆக புதுச்சேரியை சேர்ந்த ஐஸ்வர்யராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்னை ரசிகா 2வது இடத்தையும், சென்னை வெண்பா 3வது இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கேடயம் மற்றும் நினைவு பரிவு வழங்கப்பட்டது.

The post உளுந்தூர்பேட்டை அருகே கூவாகத்தில் திரண்ட பக்தர்கள்; கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம்: அரவான் களப்பலி-திருநங்கைகள் ஒப்பாரி appeared first on Dinakaran.

Read Entire Article