உளுந்தூர்பேட்டை, அக். 19: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பிள்ளையார்குப்பம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பிள்ளையார்குப்பம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் பள்ளி திறந்த போது பள்ளியின் சமையல் கூடத்தில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பது கண்டு பொறுப்பாளர் தனலட்சுமி மற்றும் தலைமையாசிரியர் செந்தில்குமரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே பார்த்தபோது, மாணவர்களுக்கு மதிய உணவுக்காக வைக்கப்பட்டிருந்த 300 முட்டைகள், 15 கிலோ துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்டவை திருடு போயிருந்தது.
இது குறித்து திருநாவலூர் காவல் நிலையத்தில் ஆசிரியர்கள் புகார் அளித்ததன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் பானுமதி பழனிவேல் கூறுகையில், இந்த பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் வந்து மது குடித்துவிட்டு தண்ணீர் தொட்டிகளை உடைப்பது, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி செல்வது உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர், என்றார். பள்ளியில், மதிய உணவுக்காக வைக்கப்பட்டிருந்த முட்டைகள் மற்றும் துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post உளுந்தூர்பேட்டை அருகே அரசு பள்ளியில் 300 முட்டைகள் திருட்டு appeared first on Dinakaran.