உல்லாசமாக இருக்க இடையூறு எனக்கருதி கள்ளக்காதலியின் குழந்தைகளை வயரால் சரமாரி தாக்கி காயத்தின் மீது மிளகாய் பொடி தூவிய கொடுமை: கொடூர வாலிபர் கைது

3 hours ago 1

திருமலை: உல்லாசமாக இருக்க இடையூறாக இருப்பதாக கருதி கள்ளக்காதலியின் குழந்தைகளை செல்போன் சார்ஜர் வயரில் சரமாரி தாக்கி மிளகாய் பொடி தூவி கொடுமை செய்த ெகாடூர ஆசாமியை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் ஜங்காரெட்டிகூடத்தை சேர்ந்தவர் சசி(30). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்து ஒருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு உதயகுமார் (10), ராகுல் (8) என்ற மகன்களும் ரேணுகா (6) என்ற மகளும் உள்ளனர். ஆனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் சசி தனது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் அதே ஊரில் வசித்து வருகிறார். சில நாட்களில் சசிக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பவன்(35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அதன்பிறகு பவனும் சசி தங்கியுள்ள வீட்டிலேயே தங்கினார். இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அப்போது உல்லாசமாக இருக்க சசியின் குழந்தைகள் இடையூறாக இருப்பதாக பவன் கருதியுள்ளார். இதை சசியிடமும் அடிக்கடி தெரிவித்துள்ளார். அவரை சசி சமாதானம் செய்துள்ளார். ஆனால் குழந்தைகள் மீது பவனுக்கு அதிகளவு வெறுப்பு ஏற்பட்டு அவர்களை கண்டிப்பது, அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றும் இதுதொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பவன், வீட்டில் இருந்து செல்போன் சார்ஜர் ஒயரை எடுத்து குழந்தைகள் 3 பேரையும் சரமாரி தாக்கியுள்ளார். வலி தாங்காமல் குழந்தைகள் கதறி துடித்தனர். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர், இதனை கண்டு அதிர்ச்சியடைந்து தடுத்தனர். இந்த தாக்குதலில் குழந்தைகள் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர், 3 குழந்தைகளையும் மீட்டு ஜங்காரெட்டிகூட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட குழந்தைகள் கதறியபடி கூறுகையில், சில நாட்களாகவே பவன் எங்களை கடுமையாக அடித்து உதைக்கிறார். செல்போன் சார்ஜர் ஒயரில் எங்களை சரமாரி தாக்கினார். ரத்தம் வழிந்து காயம் ஏற்பட்ட இடத்தில் மிளகாய் பொடியை தூவினார். இதனால் எரிச்சல், வலியால் நாங்கள் அலறி துடித்தோம். அப்போதும் எங்களை அடித்தார். நாங்கள் அலறி துடிப்பதை பார்த்த எங்களது அம்மாவும் அதை தடுக்க முடியாமல் வேதனையில் தவிக்கிறார். அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

நாங்கள் அடி வாங்குவதை தவிர வேறு ஏதும் செய்ய இயலாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் பவன், சாப்பாட்டில் மிளகாய்த்தூளை கொட்டி பிசைந்து எங்களை சாப்பிட வைக்கிறார். சாப்பிட மறுத்தால் கையில் கிடைத்த பொருளை எடுத்து எங்களை கடுமையாக தாக்குகிறார். எனவே இந்த கொடுமையில் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று கூறி கதறி அழுதனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பவனை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உல்லாசத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதி கள்ளக்காதலியின் குழந்தைகளை கொடூரமாக தாக்கி மிளகாய் பொடி தூவிய கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post உல்லாசமாக இருக்க இடையூறு எனக்கருதி கள்ளக்காதலியின் குழந்தைகளை வயரால் சரமாரி தாக்கி காயத்தின் மீது மிளகாய் பொடி தூவிய கொடுமை: கொடூர வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article