உலகிலேயே முதல் முறையாக மெரினா-பூந்தமல்லி வழித்தடத்தில் ஒரே தூணில் 5 தண்டவாளங்கள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அசத்தல்

3 hours ago 1

சென்னை: உலகிலேயே முதல் முறையாக, மெரினா-பூந்தமல்லி வழித்தடத்தில் ஒரே தூணில் 5 தண்டவாளங்களை அமைத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய சாதனை படைக்க இருக்கிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015ம் ஆண்டு முதல், சென்னை விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது, ₹63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி நடைபெறுகிறது. இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 44.6 கிலோ மீட்டர் தூரத்துக்கும் புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன.

இதில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3வது வழித்தடத்தில் 19 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை வரையிலான 4வது வழித்தடத்தில் 18 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 9 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடத்தில் 39 உயர்நிலை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களும் அமைய உள்ளன.

இந்நிலையில், உலகிலேயே முதன்முறையாக சென்னையில் ஒரே தூணில் 5 ரயில் தண்டவாளங்களுடன் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, பூந்தமல்லி – மெரினா கலங்கரை விளக்கம் வழித்தடத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, பூந்தமல்லி புறவழிச் சாலையில் இருந்து வடபழனி வரை 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், ஆற்காடு சாலை பகுதியில் சுரங்கப்பாதை மூலம் திட்டத்தை மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.

இதற்கு ₹5 ஆயிரம் கோடி கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்பதால், குறுகிய பாதையான வடபழனி முதல் போரூர் வரை உள்ள 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரே தூணில் 4 ரயில்கள் வந்து செல்லவும், ரயில்கள் இடமாற்றிக் கொள்ள ஒரு லூப் லைனும் சேர்த்து 5 தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்படுகின்றன. மேலும், இதற்கான ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த எடையை தாங்கும் வகையில், 75 மீட்டர் அளவுக்கு பூமியில் புதைக்கப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வழித்தடம் 4 மற்றும் 5 ஆகிய இரண்டும் சந்திக்கும் இடமாகவும் இது அமைக்கப்படுகிறது.

இதில் கீழே 2 தண்டவாளங்கள் 4வது வழித்தடத்திற்காகவும், மேலே 2 தண்டவாளங்கள் 5வது வழித்தடத்திற்காகவும் அமைக்கப்படுகின்றன. ஒரே தூணில் 5 ரயில் தண்டவாளங்களுடன் மெட்ரோ திட்ட பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகிலேயே முதல் முறையாக ஒரே தூணில் 5 ரயில் தண்டவாளங்களுடன் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பயன்பாட்டிற்கு வரும்போது, மக்களிடையே வரவேற்பை பெறும், என எதிர்பார்க்கப்படுகிறது,’ என்றார்.

35.53 கோடி பேர் பயணம்
சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை 35.53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

The post உலகிலேயே முதல் முறையாக மெரினா-பூந்தமல்லி வழித்தடத்தில் ஒரே தூணில் 5 தண்டவாளங்கள்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article