
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றம் மலை, கோவில் பின்னணியில் இருப்பது போன்று இந்த மாநாட்டுக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேடையில் அறுபடை வீடுகளின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு நடுவில் முருகப்பெருமான் வேலுடன் நிற்கும் பிரமாண்ட சிலை போன்ற வடிவமைப்பும் இடம் பெற்றுள்ளது.
முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார். அவர் வேட்டி, சட்டை மற்றும் பச்சை துண்டு அணிந்து பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டில் பேசிய பவன் கல்யாண் கூறியதாவது:-
என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன். மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகம். உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான். கடைசி அறுபடைவீடு மதுரையில் தான் உள்ளது. மதுரை என்பது மீனாட்சியின் பட்டணம். மீனாட்சி அம்மன் தாய் பார்வதியின் அம்சம். முருகனின் தந்தை சிவபெருமான் முதல் சங்கத்துக்கு தலைமை ஏற்று மதுரையில்தான் இருந்தார். எனவே இந்த மதுரையில்தான் தாயும் இருக்கிறார்; தந்தையும் இருக்கிறார்; மகனும் இருக்கிறார்.
அப்படி என்றால் மதுரை மக்கள் எவ்வளவு புண்ணியம் செய்து இருக்க வேண்டும். அந்த புண்ணியத்தின் விளைவாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவதரித்தார். தென் தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் கோவில் குறித்து இந்த தலைமுறைக்கு தெரியாத விஷயத்தை சொல்கிறேன். 14-ம் நூற்றாண்டில் மீனாட்சியம்மன் கோவில் மூடப்பட்டிருந்தது மதுரையின் இருண்ட காலம்.
எல்லாரையும் சமமாக பார்ப்பதுதான் அறம். இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள். சாதுமிரண்டால் காடு கொள்ளாது. இன்றைக்கும் முருகனை சீண்டி பார்க்கிறது ஒரு கூட்டம். அறத்தை அசைத்து பார்க்க அவர்கள் யார்? மற்றவர்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்த அவர்கள் யார்? உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. இந்து மதத்தை அவமரியாதை செய்யாதீர்கள். என் கடவுளை கேலி செய்துவிட்டு அதனை மதசார்பின்மை என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.