போர்ட் ஆப் ஸ்பெயின்“புதிய இந்தியாவுக்கு வானம் கூட எல்லை இல்லை” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 8 நாள்களில் 5 வௌிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, 2 நாள் பயணமாக கரிபீயன் தீவு நாடான டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். 1999ம் ஆண்டுக்கு பிறகு டிரினிடாட் டொபாகோவுக்கு இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை(ஜூலை 3) டிரினிடாட் டொபாகோ சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவில் இருந்து டிரினிடாட் டொபாகோ வந்து குடியேறிய 180 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் தருணத்தில் நான் இங்கு வந்திருப்பது வரலாற்று சிறப்பு மிக்க பயணம்.
டிரினிடாட் டொபாகோவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் பயணம் மிகவும் துணிச்சலானது. அவர்களின் முன்னோர்கள் அனுபவித்த துயரங்கள் ஆன்மாவையே உடைய செய்யும். இங்குள்ள இந்திய வம்சாவளியினர் இந்தியாவின் கலாச்சார வேர்கள், மரபுகளை தொடர்ந்து பின்பற்றி வருவது மகிழ்ச்சி, பாராட்டுக்குரியது. அவர்கள் தங்கள் மண்ணை விட்டு சென்றாலும், அவர்களின் ஆன்மாவை விட்டு செல்லவில்லை.
அவர்கள் கங்கை, யமுனையை விட்டு சென்றாலும் அவர்களின் இதயங்களில் ராமாயணத்தை சுமந்து சென்றனர். இங்கு வந்த பலரின் மூதாதையர்கள் பீகாரில் இருந்து வந்தவர்கள். பீகாரின் பாரம்பரியம் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கும் பெருமை. இங்குள்ள இந்தியா வம்சாவளியினரின் பங்களிப்பு டிரினிடாட் டொபாகோவுக்கு கலாச்சார, ஆன்மீக, பொருளாதார ரீதியான மிகவும் பயனளித்துள்ளது.
டிரினிடாட் டொபாகோவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6வது தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு வௌிநாடு வாழ் இந்தியர்களுக்கான அட்டைகள் வழங்கப்படும். உலகெங்கும் உள்ள கிர்மிதியா சமூகத்தை கவுரவிப்பதற்கும், அவர்களுடன் இணைவதற்கும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படும். கிர்மிதியா பாரம்பரியத்தை வளர்க்க எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும்.
இந்தியா தற்போது உள்கட்டமைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், உற்பத்தி, பசுமை சாலைகள், விண்வௌி பயணம், புதுமை கண்டுபிடிப்புகள், புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குதல் போன்ற அனைத்திலும் விரைவான வளர்ச்சி அடைந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் பல கோடி மக்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டதன் மூலம் அனைவரையும் உள்ளக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், செமி கன்டக்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்றவை இந்தியா முன்னேற்றம் அடைவதில் முக்கிய இயந்திரங்களாக செயலாற்றி வருகின்றன. இந்தியா விரைவில் உலகின் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும். புதிய இந்தியாவுக்கு வானம் கூட எல்லை இல்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். அதனைத்தொடர்ந்து டிரினிடாட் டொபாகோ பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
The post உலகின் 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் புதிய இந்தியாவுக்கு வானம் கூட எல்லை இல்லை: டிரினிடாட் டொபாகோவில் பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.