ராஜஸ்தான் அணிக்கு எதிராக, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 42 பந்துகளில் 70 ரன் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இது, சின்னசாமி ஸ்டேடியத்தில் கோஹ்லி அடிக்கும் 26வது அரை சதம். இதன் மூலம், டி20 போட்டியில் ஒரே ஸ்டேடியத்தில் அதிக அரை சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன், இங்கிலாந்தின் நாட்டிங்காம் நகரில் டிரென்ட் பிரிட்ஜ் ஸ்டேடியத்தில், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேலிஸ் 25 அரை சதங்கள் விளாசியதே இதுவரை சாதனையாக திகழ்ந்து வந்தது. அந்த சாதனையை தற்போது கோஹ்லி உடைத்தெறிந்துள்ளார். டி20 போட்டிகளில், சராசரி ரன், அரை சதங்கள், சதங்கள், அதிக ரன்கள் என அனைத்து வகையிலும், கோஹ்லியே முன்னணி வீரராக திகழ்கிறார். ஒரே ஸ்டேடியத்தில் அதிக அரை சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில், கோஹ்லி, அலெக்ஸ் ஹேலிஸுக்கு பின், ஜேம்ஸ் வின்ஸ் (24 அரை சதம், தி ரோஸ் பவுல் ஸ்டேடியம்), தமீம் இக்பால் (23 அரை சதம், ஷெர் இ பங்ளா நேஷனல் ஸ்டேடியம், ஜேசன் ராய் (21 அரை சதம், ஓவல் ஸ்டேடியம்) ஆகியோர் உள்ளனர்.
The post உலகளவில் முன்னிலை சின்னசாமி ஸ்டேடியத்தில் கோஹ்லி 26வது அரை சதம் appeared first on Dinakaran.