லண்டன்: ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றவர்களில் அற்புதமாக செயல்பட்ட வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் ஐசிசி உருவாக்கியுள்ள சிறப்பு அணியில் இந்தியாவின் 4 வீராங்கனைகள் இடம்பெற்று அசத்தியுள்ளனர். சமீபத்தில் முடிந்த, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 2வது முறையாக அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் மற்றும் உலகக் கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை உள்ளடக்கிய ஒரு சிறப்பு அணியை உருவாக்கி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்தியாவின் அதிரடி நட்சத்திர வீராங்கனைகளான திரிஷா கொங்காடி, தமிழக வீராங்கனை கமாலினி, சுழல் வீச்சாளர் வைஷ்ணவி சர்மா, ஆயுஷி சுக்லா ஆகிய 4 பேர் இடம் பெற்றுள்ளனர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்ற தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஜெம்மா போதா, கய்லா ரெனேகே ஐசிசி அணியில் உள்ளனர்.
தவிர, இங்கிலாந்தின் கேட்டி ஜோன்ஸ், இங்கிலாந்தின் டேவினா பெர்ரின், ஆஸ்திரேலியாவின் கெய்மே பிரே, நேபாளத்தின் பூஜா மஹாதோ, இலங்கையின் சமோதி பிரபோதா ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். 12வது வீராங்கனையாக தென் ஆப்ரிக்காவின் தாபிஸெங் நினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணியின் கேப்டனாக தென் ஆப்ரிக்காவின் கய்லா ரெனேகேவும், விக்கெட் கீப்பராக இங்கிலாந்தின் கேட்டி ஜோன்சும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
The post உலகக் கோப்பை தொடரின் சிறந்த அணி ஐசிசி கவுரவ அணியில் 4 இந்திய வீராங்கனைகள்: தமிழகத்தின் கமாலினிக்கும் இடம் appeared first on Dinakaran.