கொச்சியில் ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட 29 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உத்தரவு: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி

2 hours ago 1

திருவனந்தபுரம்: ராணுவ நல வீட்டு வசதி அமைப்பின் சார்பில் கேரள மாநிலம் கொச்சியிலுள்ள வைட்டிலாவில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்காக கடந்த 2018ம் ஆண்டு 3 டவர்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த மூன்று டவர்களில் மொத்தம் 264 குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் அனைத்து குடியிருப்புகளிலும் ராணுவத்தினரும், முன்னாள் ராணுவத்தினரும் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதில் 2 டவர்கள் கட்டுமான கோளாறால் பலவீனமடைந்துள்ளது என்றும், எனவே அதை இடித்து புதிதாக கட்டித்தர உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இங்கு வசித்து வந்த சிலர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி முகம்மது நியாஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, 2 டவர்கள் முழுவதையும் இடித்து புதிதாக கட்டிக் கொடுக்க ராணுவ நல வீட்டு வசதி அமைப்புக்கு உத்தரவிட்டார்.

புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் வரை அங்கு வசித்து வந்தவர்களுக்கு மாதம்தோறும் வாடகையாக 21 ஆயிரம் முதல் 23 ஆயிரம் வரை கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த 2 டவர்களிலும் மொத்தம் 204 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இதே போல கொச்சி மரடு பகுதியில் பலவீனமடைந்த அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைடுத்து இந்த அடுக்குமாடி குடியிருப்பு வெடிவைத்து தகர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post கொச்சியில் ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட 29 மாடிகள் கொண்ட 2 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உத்தரவு: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article