
லிமா,
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பெரு தலைநகர் லிமாவில் நடந்தது. கடைசி நாளான நேற்று முன்தினம் பெண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் இறுதி ஆட்டத்தில் தங்கப்பதக்கத்துக்கு இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுருக்கும், சீனாவின் யுஜ்லி சன்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 9-வது சுற்று நிறைவில் யுஜ்லி சன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதனால் கடைசி ரவுண்ட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த ரவுண்டில் இருவரும் தலா 3 புள்ளிகள் எடுத்தனர். முடிவில் யுஜ்லி சன் 34 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
சிம்ரன்பிரீத் கவுர் 33 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்றொரு சீன வீராங்கனை யாவ் கியான்ஸன் 29 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இந்த போட்டியில் இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 7 பதக்கத்துடன் 3-வது இடத்தை பெற்றது. சீனா 13 பதக்கத்துடன் (4 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம்) முதலிடத்தையும், அமெரிக்கா 7 பதக்கத்துடன் (4 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்) 2-வது இடத்தையும் பிடித்தது.