ஜம்மு காஷ்மீர் தாக்குதல்.. பயங்கரவாதிகளை பிடிக்க ராணுவம் தேடுதல் வேட்டை

2 weeks ago 6

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

நேற்று பஹல்காமில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு இருந்தனர். பிற்பகல் 3 மணி அளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அங்கு இறங்கி வந்தனர். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தங்கள் குடும்பத்தினர் குண்டு காயங்களுடன் தரையில் சரிந்து விழுந்ததைப் பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர். பயங்கரவாதிகளைப் பார்த்ததும் சுற்றுலா வழிகாட்டிகளும், குதிரைகளை சவாரிக்கு கொண்டு வந்த உள்ளூர்காரர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

தகவல் அறிந்ததும் ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் சம்பவ இடம் நோக்கி விரைந்தனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது. இதனிடையே பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் சம்பவம் நடந்த இடத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியானது. இதில் கர்நாடகா, ஒடிசா, குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் அடங்குவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்த 13 பேரில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

நேற்று நடந்த பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் 2019-ம் ஆண்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது நடந்த புல்வாமா தாக்குதலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் என்று தெரியவந்து உள்ளது.

இந்நிலையில் காலை 11 மணிக்கு பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article