தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்

5 hours ago 2

மதுரை: தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என்று சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். கீழடியில் நடந்த முதல் இரண்டு அகழாய்வின் அறிக்கை வெளியிடப்படாமல், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ள நிலையில், ஒன்றிய அரசு, தற்போது ஆய்வறிக்கையை திருத்தி சமர்ப்பிக்க ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் கோரியுள்ளது.

இதற்கு பல தரப்பினரிடமிருந்தும் கண்டனமும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்திய தொல்லியல் கழகத்தின் இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது என்றும், இது தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை மறைக்க செய்யப்படுகிறது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது; “கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார். ஆனால் இந்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்ட போது “விரைவில் வெளியிடப்படும்” என்று தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது.

ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி நாடாளுமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என இந்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. கீழடியின் உண்மைகளை அதிகார பூர்வமாக அறிவிக்க இந்திய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை மத்திய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி பாஜக அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது. அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது. “கீழடி தமிழர்களின் தாய்மடி” என்ற உண்மையை உரக்கச்சொல்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article