*தொடர் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் உத்தரவு
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் சொக்கநாதபுரம், எம்.புதூர், சாஸ்திரிபுரம், கே.புதூர், குரும்பாபாளையம் ஆகிய 5 கிராமங்களில் புகையிலை பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு புகையிலை பயன்பாடற்ற கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் புகையிலை, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாட்டை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், காசநோய்த் தடுப்பு குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரம் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் அதன் முடிவுகள் குறித்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த மூன்று மாதங்களில் எந்த வகையான நோய் பாதிப்பு அதிக அளவில் உள்ளது, அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரசவங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் விரிவாக ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தில் சொக்கநாதபுரம், எம்.புதூர், சாஸ்திரிபுரம், கே.புதூர், குரும்பாபாளையம் ஆகிய கிராமங்களில் புகையிலை பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு புகையிலை பயன்பாடற்ற கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த நிலை உருவாக்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு அறிவிக்கப்பட்டு விட்டதால் அந்த கிராமங்களில் ஆய்வு செய்வதை நிறுத்திவிடாமல் தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் முறையான இடைவெளியில் சுத்தமாக கழுவப்படுகின்றதா என்பது குறித்த ஆய்வுகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட வேண்டும்.
வாரத்திற்கு குறைந்தது 5 இடங்களிலாவது பொது மக்கள் குடிக்கப் பயன்படுத்தும் நீரின் தரம் குறித்து ஆய்வு செய்திட வேண்டும்.
மாதத்திற்கு 20 ஆய்வுகள் கண்டிப்பாக நடத்தப்பட்டு அதன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த மாவட்ட கலெக்டர், அயோடின் குறைபாடுடைய உப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா என கடைகளிலும், உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத் துறையினரும், சுகாதாரத்துறையினரும் கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
அயோடின் குறைபாட்டை தவிர்க்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 5340 வீடுகளிலும், ஏப்ரல் முதல் தற்போது வரை 2880 வீடுகளிலும், குழந்தைகள் மையம், கடைகளிலும் அயோடின் உப்பு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தர ராமன் மற்றும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பெரம்பலூர் 5 கிராமங்கள் புகையிலை பயன்பாடற்ற கிராமங்களாக அறிவிப்பு appeared first on Dinakaran.