சென்னை,
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. 14 சுற்று கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தனர். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. முடிவில் இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர். இந்த நிலையில்,நேற்று முன்தினம் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. 58-வது நகர்த்தலில் டிங் லீரெனை (7.5 - 6.5 என்ற புள்ளிக் கணக்கில்) வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். இதன் மூலம் தமிழக வீரரான குகேஷ் உலக சாம்பியன் ஆனார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
இந்த நிலையில் , சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு , முன்னாள் உலக செஸ் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான மாக்னஸ் கார்ல்சன் பாராட்டு தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக கூறுகையில், 'குகேஷ் செய்தது நம்பமுடியாத சாதனையாகும் குகேஷ் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிறைய சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்தன. லிரென் கடைசி வரை நம்பிக்கையோடு காணப்பட்டாலும் குகேஷ் அதிரடியாக வெற்றியை வசப்படுத்தினார். இந்த வெற்றி குகேசுக்கு நல்ல உத்வேகம் அளித்திருக்கும். அனேகமாக தற்போது அவர் தரவரிசையில் 2-வது இடத்தை பிடிப்பார் என்று நினைக்கிறேன். அவர் வருங்காலத்தில் நம்பர் ஒன் இடத்தையும் கைப்பற்றுவார்' என்றார்.