உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாம்… தொழிலாளர்கள் 76% பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு: உடல் சோர்வால் 62 சதவீதம் பேர் அவதி

3 months ago 18

சேலம்: இந்திய தொழிலாளர்கள் 76 சதவீதம் பேர் மன அழுத்தத்தாலும், 62 சதவீதம் பேர் உடல் சோர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மனநலத்துறை சார்பில் உலக மனநல தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மருத்துவமனை டீன் தேவிமீனாள், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தனர். செவிலியர் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு, மருத்துவமனை வளாகம் முழுவதும் சென்று வந்தனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கையேடுகள் விநியோகிக்கப்பட்டது.

தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளால் மனநலம் குறித்து வில்லுப்பாட்டு, நாடகம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மனநல மருத்துவ துறைத்தலைவர் ரவிசங்கர், இணை பேராசிரியர் முகமது இலியாஸ், உதவிப்பேராசிரியர்கள் சங்கர், அபிராமி, ஷியாம் பிரகாஷ், அகல்யா, சற்குணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இணைப்பேராசிரியர் டாக்டர் முகமது இலியாஸ் கூறியதாவது: ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10ம் தேதி உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு “பணியிடத்தில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய நேரம் இது’’ என்பது கருப்பொருளாகும. இன்றைய நவீன உலகில் பணியிட தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வேலை செய்யும் இடங்களில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியமானதாகும்.

பலருக்கும் வேலை தொடர்பான அழுத்தங்களால் மன அழுத்தம், மன பதட்டம், மனச்சோர்வு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சரிசெய்வதால் பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் உற்பத்தி திறனும் மேம்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி 76 சதவீத தொழிலாளர்கள் மன அழுத்தத்தால் தங்கள் வேலை பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும், 62 சதவீதம் பேர் உடல் சோர்வையும் அனுபவிப்பதாக தெரிவிக்கின்றனர். இது உலக சராசரியான 20 சதவீதத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும். உலக சுகாதார அமைப்பு தெரிவித்தபடி, மனச்சோர்வு மற்றும் மன பதட்டத்தினால் பொருளாதார உற்பத்தியில் ஆண்டுக்கு 1 லட்சம் கோடி டாலர் குறைகிறது.

பல நிறுவனங்கள் குறைவான முதலீட்டில் அதிக லாபத்தை எதிர்பார்க்கின்றன. பெருகிவரும் செல்போன் உள்ளிட்ட தொலைதொடர்பு சாதனங்களால் பணியாளர்கள் 24 மணி நேரமும், எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளக்கூடிய சூழ்நிலை இருப்பதால், வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையின்மைக்கு வழிவகுக்கிறது. பெருகிவரும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் வேலையில் நிலையற்ற தன்மை பற்றிய கவலைகள் மனநலனை பாதிக்கிறது.

மனநலன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் பணியாளர்களின் வேலையில் கவனக்குறைவை ஏற்படுத்தி, அவர்களின் செயல்திறனை குறைத்து நிறுவனங்களின் உற்பத்தி திறனை பாதிக்கிறது. மன அழுத்தம் ெதாடர்பான பாதிப்பால் பணியாளர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பதால் நிறுவனத்தின் உற்பத்தி திறனை மேலும் பாதிக்கும். அதிக வேலைப்பளுவின் காரணமாக மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் பணியை விட்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பணிக்கும், குடும்ப வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை ஊக்குவிக்கும் வகையில் நெகிழ்வான வேலை நேரத்தை அமைக்கலாம். வழக்கமான இடைவேளைகள் மற்றும் விடுமுறைகள் எடுக்க ஊழியர்களை ஊக்குவிக்கலாம். மனஅழுத்தம், மன பதட்டம், மனச்சோர்வு ேபான்றவற்றின் ஆரம்ப அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

மனநோய்க்கான சிகிச்சைகள் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது. இதுதவிர்த்து மாவட்ட மனநலத்திட்டம் மூலமாக தாலுகா மருத்துமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்கொலை தடுப்பு மற்றும் அவசர மனநல ஆலோசனைகளுக்கு 104 என்ற இலவச அவசர கால உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

பணியிடத்தில் உரிய விழிப்புணர்வு தேவை
‘‘பணியிடத்தில் மனநலம் குறித்த விழிப்புணர்வு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே மனநலம் பற்றிய வௌிப்படையான உரையாடல்களை உருவாக்கி, பணியாளர்களின் மனநல உதவித்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பணியிடத்தின் தலைமை பொறுப்பாளர்கள் மற்றும் மேலாளர்களும் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பணியாளர்களின் சொந்த மனநல பிரச்னைகள் மற்றும் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். மனநல ஆலோசனைகளை வழங்க மனநல மருத்துவ நிபுணர்களுடன் கூட்டமைத்து செயல்பட வேண்டும். தொலைதூர பணியாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் மனநல ஆலோசனை ஏற்படுத்துதல், அனைத்து ஊழியர்களுக்கும் இந்த சேவைகள் கிடைப்பதை தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும்,’’ என்பதும் மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரை.

The post உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாம்… தொழிலாளர்கள் 76% பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு: உடல் சோர்வால் 62 சதவீதம் பேர் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article