உலக அளவில் வர்த்தக விரிவாக்கத்தில் முன்னணியில் இந்தியா: ஐ.நா. அறிக்கை

4 hours ago 2

ஐ.நா. சபை,

உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்த நாடுகள் வர்த்தகத்தில் சுருக்கம் கண்ட நிலையில், சராசரி வர்த்தக விரிவாக்கத்திற்கும் கூடுதலாக வளர்ந்து வரும் நாடுகளான, குறிப்பிடும்படியாக சீனா மற்றும் இந்தியா முன்னணியில் உள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.

உலக அளவில் சரக்கு மற்றும் சேவை வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றின் அடிப்படையில், நாடுகளின் வர்த்தகம் சார்ந்த வளர்ச்சி நிலை கணக்கில் கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, 2024-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வர்த்தகத்தில் முன்னணி வகிக்கின்றன என ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இதுபற்றி ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சி அமைப்பு, மார்ச் தொடக்கம் வரையிலான தரவுகளின் அடிப்படையில் வெளியிட்டு உள்ள செய்தியில், உலகளாவிய வர்த்தகம் 2024-ம் ஆண்டில் 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் விரிவாக்கம் கண்டுள்ளது. இது ஒட்டுமொத்தத்தில் 33 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

இதன் முடிவில், சேவை வர்த்தகம் 9 சதவீதம் அளவுக்கும், சரக்கு வர்த்தகம் 2 சதவீதம் அளவுக்கும் வளர்ச்சி அடைந்து உள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், சேவை மற்றும் சரக்கு சார்ந்த வர்த்தகம் உலக அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.

2024-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில், வர்த்தகத்தில் செல்வாக்கு செலுத்தும் ஒரு முக்கிய நாடாக அமெரிக்கா இருந்தபோதும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் வலுவான வர்த்தக செயல்பாட்டில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளின் வர்த்தகம், அதிலும் ஏற்றுமதியில் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.

பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ள தென்கொரியா ஏற்றுமதி வளர்ச்சியில் சரிவை கண்டுள்ளது. அமெரிக்காவில் இறக்குமதி வளர்ச்சி தொடர்ந்து நேர்மறையாகவே உள்ளபோதிலும், ஏற்றுமதி வளர்ச்சி எதிர்மறையான நிலையில் உள்ளது.

ஜப்பான், ரஷியா, தென்ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதேசங்களில் காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் இறக்குமதி வளர்ச்சி ஆனது எதிர்மறையான நிலையிலேயே உள்ளது.

இந்தியாவின் சாதனை

முந்தின காலாண்டுடன் ஒப்பிடும்போது, இந்த 4-ம் காலாண்டில் சரக்கு வர்த்தகத்தில் 8 சதவீதம் இறக்குமதி வளர்ச்சி என்ற அளவில் இந்தியா சாதனை படைத்து உள்ளது. வருடாந்திர இறக்குமதி வளர்ச்சி 6 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதேபோன்று, சரக்கு வர்த்தகத்தின் காலாண்டுக்கான ஏற்றுமதி வளர்ச்சி 7 சதவீதம் என்ற அளவிலும், வருடாந்திர ஏற்றுமதி வளர்ச்சி 2 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.

சேவை வர்த்தகத்தின் வளர்ச்சியில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் வலுவான நிலையில் உள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. வருடாந்திர அடிப்படையில், வளர்ந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட மிக பெரிய நாடுகளில் சேவை வர்த்தகம் வளர்ச்சியானது இரட்டை இலக்கம் என்ற அளவை அடைந்துள்ளது.

எனினும் வருகிற காலாண்டுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான சாத்தியமும் உள்ளது என அந்த அறிக்கை எச்சரிக்கை தெரிவித்து உள்ளது. இதற்கேற்ப நடப்பு 2025-ம் ஆண்டின் முதல் மாதங்களில், கன்டெய்னர் போக்குவரத்துக்கான தேவை குறைந்து காணப்பட்டது.

உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளில் மந்தநிலைக்கான அறிகுறியும் காணப்படுகிறது என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இடைநிலை பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட சரக்குகளுக்கான தேவையும் சர்வதேச அளவில் குறைந்து காணப்படுகிறது என்றும் அதற்கான சரக்கு சார்ந்த குறியீடுகள் தெரிவிக்கின்றன.

வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா பார்க்கப்பட்டபோதும், வளர்ச்சி நிலையில் அமெரிக்காவை சீனா முந்தியுள்ளது ஐ.நா. அமைப்பு வெளியிட்ட அறிக்கை வழியே தெரிய வருகிறது. இதேபோன்று வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியாவும் வர்த்தக விரிவாக்கத்தில் முன்னணியில் உள்ளது கவனிக்கத்தக்கது. 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்குடன் இந்தியா வளர்ந்து வரும் சூழலில், ஐ.நா.வின் இந்த அறிக்கை அதனை நிரூபிக்கும் வகையில் உள்ளது.

Read Entire Article