உறையூர் வெக்காளியம்மன்

5 hours ago 3

ராஜகோபுர தரிசனம்!

முதற்கால சோழ மன்னர் ஆட்சிக்காலமான 6-9ம் நூற்றாண்டு காலத்திற்கு முன்பே இக்கோயில் கட்டப்பட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது. உறையூர் சோழர்களின் தலைநகரமாக இருந்த காலத்தில், வெக்காளியம்மன் கோயில் சோழ மன்னர்களின் அரச குடும்பத்தினரால் போற்றப்பட்ட ஆலயமாகும். மேலும் சில புராணக் குறிப்புகளில் கரிகால சோழ மன்னரின் குலதெய்வமாக வெக்காளியம்மன் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கரிகாலன் உறையூரை தலைநகரமாக வைத்திருந்ததால், அந்தக் காலத்தில் இருந்தே இந்தக் கோயில் இருந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலின் மூலஸ்தலம் சங்கக் காலத்தில் வழிபாட்டுத் தலமாக அமைக்கப்பட்டிருக்கலாம். கோயில் பழமையானதாக இருந்தாலும், தற்போதைய கட்டுமானங்கள் பிந்திய சோழர் மற்றும் நாயக்கர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கோயிலில் பல பழமையான சிற்பக்கலை மற்றும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோபுரம் இல்லாத கோயில் என்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். வெக்காளி அம்மன் கோயிலுக்கு கோபுரம் இல்லாததற்கு முக்கியமான வரலாற்று காரணமாகும்.

உறையூர் சோழர்கள்

ஆட்சிக்காலத்திலேயே முக்கிய நகரமாக இருந்தது. கரிகால சோழன் அம்மனின் தீவிர பக்தன் என்பதால், அம்மன் தன் பக்தர்களுக்கு துணை நின்று அருள், ஆசி மற்றும் பாதுகாப்பு வழங்கி வந்தாள். உறையூரில் பழங்காலத்தில் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் உறையூர் பெரும் பாதிப்பிற்குள்ளாகியது. அதற்குப் பிறகு, வெக்காளியம்மன் பக்தர்களை காக்க தனக்கு கோபுரம் அமைக்கக் கூடாது என்று அசரீரியாக கூறியதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக கோயிலுக்கு கோபுரம் அமைக்கப்படவில்லை.

அதனாலேயே இன்று வரை அம்மன் சந்நதிக்கு மேல் கூரை மற்றும் கோபுரம் அமைக்கப்படவில்லை. ஆண்டுதோறும் வெகு சிறப்பாக ஆடி மாதத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இக்கோயில் தமிழ்நாடு அரசின் இந்து மத மற்றும் அறக்கட்டளை வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. சோழர்கள் போர்க்களத்திற்குச் செல்வதற்கு முன்பு வெக்காளியம்மனை வணங்கி சென்றதாகவும், திருச்சி மக்களின், கடினமான காலங்களில் வெக்காளியம்மன் அவர்களை மீட்பவராக கருதுகின்றனர்.

இங்கு வருகை தரும் பக்தர்கள் தங்கள் பிரச்னைகளை ஒரு காகிதத்தில் எழுதி இங்கு கட்டிவிட்டு செல்வார்கள். அம்மன் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி தங்கள் பிரச்னைகளை நிவர்த்தி செய்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்றும் உள்ளது.

கோபுரம் அமைக்கப்படாத காரணம்…

சாரமா முனிவர் உறையூரில் செவ்வந்தி தோட்டத்தை பராமரித்து வந்தார். அவர் தோட்டத்து மலர்களை அரசனுக்காக எடுத்து சென்றான், பிராந்தகன் எனும் வணிகன். முனிவர் மன்னனிடம் முறையிட அவர் அதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை. இதனால் கோபமான சாரமாமுனிவர் தாயுமானவரிடம் முறையிட்டார். ஈசன் கோபமுற்று மேற்கு நோக்கித் திரும்பி உறையூரையிலும் அங்குள்ள மன்னன் அரண்மனையிலும் மண் மழை பொழிய வைத்தார்.

இதனால் பீதியடைந்த மக்கள் சோழர்களின் காவல் தேவியான கொற்றவையிடம் சரண் அடைந்தார்கள். மக்களை காக்க வெட்ட வெளியில் எழுந்தருளினாள். மக்களுக்கு தங்குமிடம் கட்டும் வரை தன்னுடைய கோயிலுக்கு கூரை கட்டக்கூடாது என்று தேவி உத்தரவிட்டாள். அன்றிலிருந்து இன்று வரை, அருள்மிகு வெக்காளியம்மன் கோயிலுக்கு கூரை இல்லை. பல்வேறு காலங்களில் கூரை கட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அது இடிந்து விழுந்ததாக அங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். வெயில், மழை என எல்லா காலத்திலும் அம்மன் வெட்ட வெளியில்தான் மக்களுக்கு தரிசனம் தந்து வருகிறாள்.

திலகவதி

The post உறையூர் வெக்காளியம்மன் appeared first on Dinakaran.

Read Entire Article