உறவினர் அஸ்தியை ஆற்றில் கரைக்க சென்ற எலக்ட்ரீசியனுக்கு நேர்ந்த சோகம்

5 hours ago 4

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கோணங்கிபாளையம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது அஸ்தியை கரைப்பதற்காக தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றுக்கு உறவினர்கள் 35 பேர் லாரியில் சென்றனர்.

அங்கு அனைவரும் காவிரி ஆற்றங்கரையில் ஈமச்சடங்கில் கலந்து கொண்டு அஸ்தியை கரைத்துள்ளனர். பின்னர் உறவினர்கள் அனைவரும் ஆற்றில் குளிக்க சென்றனர். இவர்களில், திருப்பத்தூர் வேலன் நகர் பகுதியை சேர்ந்த வெங்கட்டின் மகனான எலக்ட்ரீசியன் விஜய் (24) என்ற உறவினரும் வந்திருந்தார். அவர் கிழக்குக்கரையில் இருந்து மேற்கு கரை வரை நீந்தி சென்றபோது நடு ஆற்றில் நீந்த முடியாமல் விஜய் மூச்சு திணறி நீரில் மூழ்கினார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக தேவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கோனேரிப்பட்டி அக்ரகாரம் கிராம நிர்வாக அலுவலர் தமிழ் முருகன் மற்றும் தேவூர் போலீசார், சங்ககிரி தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் மீன்பிடி தொழிலாளர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரம் போராடி நீரில் மூழ்கிய எலக்ட்ரீசியன் விஜய்யின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article