
சென்னை,
கடந்த 10-ந்தேதி பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாசை நீக்கியும், இனி நானே தலைவர் என்றும் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார். இதற்கு அன்றைய தினமே எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. பொருளாளர் திலகபாமா, தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், பா.ம.க.வின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, அய்யா (ராமதாஸ்) எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால், இந்த முடிவு தவறு. 'அன்புதானே எல்லாம்' என்று கூறி இருந்தார்.
டாக்டர் ராமதாசை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று கூறிய பா.ம.க. பொருளாளர் திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்தநிலையில், "உடன்படா கருத்தையும் உரைக்கின்ற உன் உரிமையை, உயிரை தந்தேனும் காப்பேன்" என வடிவேல் ராவணனின் காட்டமான அறிக்கையை தொடர்ந்து திலகபாமா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உட்கட்சி விவகாரத்தில் கருத்து தெரிவித்த நிலையில் மீண்டும் திலகபாமா சர்ச்சை கருத்து வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.