தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளை அழைத்து குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது. அவ்வாறு நடத்தப்படும் கூட்டங்களில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்திற்கான குறைகேட்பு கூட்டம், மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட விவசாயிகள் விவசாய நிலங்களுக்கென சாலை வசதி அமைக்க வேண்டும், கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க வேண்டும், பழுதடைந்த மின்கம்பங்களை சீரமைத்திட வேண்டும், மணிலா பயிர் பூச்சி தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும், காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும், வேளாண் இயந்திரம் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு விரைந்து மானியத்தினை வழங்கிட வேண்டும், மழை வெள்ளத்தால் அரிப்பு ஏற்பட்டு பாதிப்படைந்த பாலத்தின் கரைகளை சீரமைக்க வேண்டும், மீன் வளர்ப்பு கண்மாய்களில் தண்ணீரினை சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,
கண்மாய்களில் இருந்து விவசாயிகளின் தேவைக்காக வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும், கால்நடை மருத்துவமனைகளில் போதிய அளவு மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும், கால்நடை மருத்துவர்கள் பணியில் இருப்பதனை உறுதி செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.விவசாயிகளின் குறைகள் மற்றும் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் குறைகளைக் களைந்திடவும், தேவையான ஆலோசனைகளை நடைமுறைப்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை விவசாயிகளுக்கு கிடைத்திட விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஃபெஞ்சல் மற்றும் கனமழையினால் ஏற்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் விவசாயிகளுக்கான நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 7,746 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,831 மெட்ரிக் டன், பொட்டாஷ் 3,146 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 5,766 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1.110 மெட்ரிக் டன் என மொத்தம் 19,599 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. எண்ணெய் வித்து 41,421 மெட்ரிக் டன், பருப்பு வகை 22,855 மெட்ரிக் டன், நெற்பயிர் 2,97,359 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் 10,047 மெட்ரிக் டன், எள் 2,008.1 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. கடந்த 1.4.2024 முதல் 26.2.2025 வரையிலான காலத்தில் ரூ.342 கோடி மதிப்பீட்டில் 1,15,148 மெட்ரிக் டன் நெல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் உரம் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
The post உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை! appeared first on Dinakaran.