உயர்கல்வி குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும்!

1 month ago 8

ஒரு மாணவர் தனது உயர்கல்வியைத் தேர்ந்தெடுப்பதில் இன்று நிறைய சிக்கல்களும், குழப்பங்களும் நிலவுகின்றன. இந்தக் குழப்பங்கள் பல்வேறு காரணங்களாலும் சூழ்நிலைகளாலும் ஏற்படுகின்றன. இவை தவிர்க்கப்படுவது மிகவும் அவசியம்.‌ ஒரு மாணவன் 6ஆம் வகுப்பு அல்லது 7ஆம் வகுப்பு படிக்கும் போதே உயர்கல்வி பற்றி பெற்றோர்கள் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இந்தப் பாதையில் வழி நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள்.‌ இது சரியான அணுகுமுறைதான். ஏனென்றால், பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு மேற்கொண்டு என்ன படிப்பது என்ற சிந்தனைகள் இருக்காது. அதற்காக நம்மைச் சுற்றி இருக்கக்கூடிய வாய்ப்புகளை சொல்லிக் கொடுப்பது சிறப்பான அணுகுமுறை. ஆனாலும் ஒரு மாணவர் 12ஆம் வகுப்பு முடிக்கும்போது அவருக்கு ஒரு விருப்பமான துறை மனதில் பதிந்துவிடும்.‌

இதற்குப் பிறகு பெற்றோரின் பணி என்பது மாணவர் விரும்பும் துறையில் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை எடுத்துக் கூறி தெளியவைக்க வேண்டியது மட்டுமே. இதை விட்டுவிட்டு வலுக்கட்டாயமாக மாணவர்களுக்குப் பிடிக்காத ஒரு துறையில் கொண்டு போய் விடக்கூடாது. இது பொதுவான அறிவுரை.‌ ஆனால், இங்கு நிலவும் நுட்பமான சிக்கல்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். உயர்கல்வியைத் தேர்ந்தெடுக்கும்போது நிறைய விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.‌

பெண்களின் கல்வி

தமிழகத்தின் சில மாவட்டங்களில் தங்கள் பெண் குழந்தைகளை 15 கிலோமீட்டர் தூரத்தில் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. இப்படி இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எஞ்ஜினியரிங் படிக்க வைக்கிறார்கள். அந்தப் பொறியியல் படிப்பிற்கான வேலை 15 கிலோமீட்டர் சுற்றளவில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறபோது அந்தப் பெண் படித்த தொழில் கல்வி என்பது பயன்பாடு இல்லாமல் போய்விடுகிறது.‌ வழக்கம் போல திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையைத் தொடங்கும் அந்தப் பெண் கலை அறிவியல் படிப்புகளைப் படித்திருந்தால் அடுத்த தலைமுறைக்கு கற்பிக்க உதவும். இது பெண் கல்வியைக் குறைத்து மதிப்பிடுவது அல்ல, சில இடங்களில் இருக்கும் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் சொல்லப்படும் கருத்து. எதிர்காலத்தில் வெளிநகரங்களுக்கோ வெளிநாடுகளுக்கோ வேலைக்கு அனுப்ப விருப்பமுள்ள பெற்றோர்கள் மட்டும் தங்களுடைய பெண்குழந்தைகளுக்குப் பொறியியல் போன்ற தொழில் கல்வி படிப்புகளைக் கொடுக்கலாம்.

சூழலைப் பாருங்கள்

உயர்கல்வியில் ஆண்களுக்கும் சில சிக்கல்கள் உருவாவது உண்டு. சில பெற்றோர்கள் பெரிய பணக்காரர்களாக இருப்பார்கள்.‌ பெரிய பிசினஸ் செய்வார்கள்.‌ தங்கள் ஒரே மகனின் விருப்பப்படி பொறியியல் அல்லது மருத்துவப் படிப்புக்கு அனுப்புவார்கள்.‌ மருத்துவம் படித்துவிட்டு அதே துறையில் பணிபுரிய விரும்பும்போது நீ அந்த வேலையைப் பார்க்கப் போனால் இந்த பிசினஸை யார் கவனிப்பது? எதுவும் வேண்டாம் தொடர்ந்து நம்முடைய சொந்த பிசினஸை கவனித்துக்கொள் என்று சொல்லிவிடுவார்கள்.‌ இப்படி இருக்கும் பெற்றோர்கள் தங்களுடைய மகனுக்கு தொழில் வியாபாரம் சார்ந்த படிப்புகளான பிபிஏ, எம்பிஏ, பி.பி.எம்., போன்ற படிப்புகளைத் தேர்ந்தெடுப்பது மிகச்சிறந்ததாக இருக்கும். ஆனால், இதில் உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுவது நல்லது.

போட்டித் தேர்வும் பொறியியல் படிப்புகளும்

இன்றைக்குப் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களைக் கவனித்தால் நிறைய பேர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு அதிக பணம் செலுத்தி ஐந்து வருடம் பொறியியல் படிப்பு படிக்கிறார்கள். பிறகு சில ஆண்டுகள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்துவிட்டு மீண்டும் பத்தாம் வகுப்பு தரத்திலான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள், பட்டப் படிப்பு தரத்திலான குரூப் 2 தேர்வுகள் மற்றும் வங்கித் தேர்வுகளை எழுத வருகிறார்கள். இதைத் தவறு என்று சொல்வதற்கில்லை. ஆனால் இவர்கள் படித்த பொறியியல் படிப்பு எந்த வகையிலும் பயனுடையதாக இருப்பதில்லை. எஞ்ஜினியரிங் படிப்பவர்களுக்கு ஆங்கிலம் ஓரளவு எளிதாக இருக்கிறது. அதனால் வங்கித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. வங்கிப் பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும்.‌ ஆங்கில மொழி அறிவு வேண்டுமென்றால் ஆங்கிலப் பாடத்தை எடுத்துப் படிக்கலாம்.‌ பொறியியல் படிப்பு முடித்துவிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்காகத் திரும்பி வருவது என்பது ஒரு பொறியாளர் தன்னுடைய மனித வளத்தை வீணடிப்பது ஆகும். அதற்குப் பதிலாக பத்தாம் வகுப்பு முடித்தவுடன் பட்டப் படிப்பு படித்துக்கொண்டே போட்டித் தேர்வுக்காகத் தயாராகி யிருக்கலாம். விரைவிலேயே வேலை கிடைத்திருக்கும்.

மெல்ல கற்கும் மாணவர்கள்

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் பரவலாக இருக்கும் இன்னொரு பிரச்னை மெல்ல கற்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்.‌ மெல்ல கற்கும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிடலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்பயிற்சி மையங்கள்( ஐடிஐ) இருக்கின்றன. எட்டாம் வகுப்புச் சான்றிதழை வைத்துக்கொண்டு தொழில் பயிற்சி எடுத்துக்கொண்டால் பயிற்சி முடித்தவுடன் வங்கிக் கடன் பெற்று சொந்தமாகத் தொழில் செய்யலாம்.

எட்டாம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் தொழிற்பயிற்சி முடிக்கும்போது அது பத்தாம் வகுப்பிற்குச் சமமான படிப்பாகக் கருதப்படுகிறது. அது போலப் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு இரண்டு ஆண்டுகள் தொழிற்பயிற்சி பெறும்போது அது 12ஆம் வகுப்புக்கு சமமான படிப்பாக கருதப்படுகிறது.‌ தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களுக்குத் தேவையான சீருடை, மிதிவண்டி, லேப்டாப், மாதாந்திர உதவித் தொகை ஆகியவற்றை வழங்குகின்றன. மெல்ல கற்கும் மாணவர்களுக்கு இந்த வகையில் சரியாக வழிகாட்டலாம்.‌ அதை விடுத்து அவர்களைத் தொடர்ந்து பள்ளிப்படிப்பைப் படிக்க வற்புறுத்தக் கூடாது.‌ அப்படி வற்புறுத்தலின் பேரில் படிக்கும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைகிறார்கள். மேலும் விரக்தி மனநிலைக்கு வந்து விடுகிறார்கள்.

ட்ரெண்டிங் படிப்புகள்

ட்ரெண்டிங் படிப்புகளை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு சரியாக இருக்காது. இன்றைக்கு வேகமாக வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்துப் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தனிப் படிப்புகளைத் தொடங்குகின்றன.‌ ஏஐ தொழில்நுட்பம் குறித்துத் தனியாக எதுவும் படிக்கத் தேவையில்லை.‌ எப்படி இன்று படிக்காதவர்கள்கூட அலைபேசியில் வாட்ஸப் அனுப்புவதற்கும் படங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் பழகி விட்டார்களோ அதுபோல ஏஐ தொழில்நுட்பமும் விரைவில் அலைபேசி மூலமாகவே பழகிக்கொள்ள முடியும். இதுபோன்ற படிப்புகளின் ட்ரெண்ட் திடீரென்று இறங்கிவிடலாம் என்பதால் மாணவர்கள் எப்போதும் எவர் கிரீன் படிப்புகளை தேர்ந்தெடுப்பது நல்லது.
உயிர்கல்வியை் தேர்ந்தெடுப்பதில் மிக முக்கியமான பிரச்னை பலரும் பல யோசனைகளை சொல்லி குழப்புவதுதான். இங்கே நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான்; பலரிடமும் யோசனை கேளுங்கள் முடிவாக உங்கள் மனம் சொல்லும் படிப்பைத் தேர்ந்தெடுங்கள்! இன்னும் படிப்போம்!

The post உயர்கல்வி குழப்பங்கள் தவிர்க்கப்பட வேண்டும்! appeared first on Dinakaran.

Read Entire Article