
கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே உள்ள உப்புபாளையத்தில் வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. இங்கு உள்ள வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கும் முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அவ்வகையில், உலக நன்மைக்காகவும் ஊர் கிராம மக்கள் நன்மைக்காகவும் சிறப்பு யாக பூஜைகள் மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. சிவ சித்தர்கள் யாக பூஜையை நடத்தினர். வீரமாத்தி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள், குத்து விளக்குகளை கொண்டு வந்து விளக்கு பூஜை செய்தனர். இந்நிகழ்வில் சிவசித்தர்கள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்து குத்துவிளக்கு பூஜையினை தொடங்கி வைத்தனர். இந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.