மகாகும்ப் நகர்: உத்தரப்பிரதேசத்தில் நடந்துவரும் மகா கும்பமேளாவில் ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச முதல்வர்கள் நேற்று புனித நீராடினார்கள். உத்தரப்பிரதேசத்தின் கும்ப் நகரில் ஜனவரி 13ம் தேதி தொடங்கி மகா கும்பமேளா நடந்து வருகின்றது. இந்த மாதம் 26ம் தேதி வரை கும்பமேளா நடைபெற உள்ளது. நாள்தோறும் பல லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள், அமைச்சர்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி கங்கையை ஆரத்தி செய்து வழிபட்டனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா மற்றும் மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் நேற்று மகா கும்பமேளாவில் தங்களது மனைவிகளுடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள் திரிவேணி சங்கமத்தில் ஒரே நேரத்தில் புனித நீராடினார்கள். கடந்த 19ம் தேதியும் சர்மா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மகாகும்பமேளாவில் நேற்று நீராட லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் பிரயாக்ராஜ் நகர் முழுவதும் வாகன நெருக்கடியால் திணறியது.
The post உபியில் நடக்கும் மகா கும்பமேளாவில் ம.பி., ராஜஸ்தான் முதல்வர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடல் appeared first on Dinakaran.