உபியில் 30 பக்தர்கள் பலியான மகா கும்பமேளா நெரிசல் விசாரணை குழு அமைப்பு: ஒரு மாதத்தில் அறிக்கை தர உத்தரவு

1 week ago 1

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மவுனி அமாவாசையையொட்டி ஒரே நாளில் சுமார் 10 கோடி பேர் கங்கையில் புனித நீராட கும்பமேளாவில் குவிந்தனர். அதிகாலை 2 மணி அளவில் திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் பயங்கர நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பக்தர்கள் பலியாகினர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தொகையை உபி அரசு அறிவித்துள்ளது. தடுப்புகளை தாண்டி மக்கள் நீராட முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, நெரிசல் ஏற்பட என்ன காரணம் என்பது குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணை குழுவை உபி அரசு நேற்று அமைத்தது.

இக்குழுவில் அலகாபாத் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்ஷ் குமார், முன்னாள் டிஜிபி வி.கே.குப்தா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.கே.சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் உடனடியாக நேற்றே பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இன்று இக்குழு மகா கும்பமேளாவில் நெரிசல் ஏற்பட்ட திரிவேணி சங்கமம் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர். இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹர்ஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘விசாரணையை ஒரு மாதத்தில் முடித்து அறிக்கை தர அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்பாக விசாரணையை முடிக்க முயற்சி செய்வோம். நெரிசலுக்கான மூல காரணத்தை முதலில் அடையாளம் காண்போம். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்போம்’’ என்றார்.

* மேலும் பலரை காணவில்லை
இதற்கிடையே, நெரிசலுக்குப் பிறகு மகா கும்பமேளாவுக்கு வந்த தங்களின் குடும்பத்தினரை காணவில்லை என பலரும் அங்குள்ள காவல் துறையிடம் முறையிட்டுள்ளனர். காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தர தனி மையம் கும்பமேளா பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பலரும் புகாரளித்து தங்களின் குடும்பத்தினருக்காக காத்திருக்கின்றனர். அவர்கள் நெரிசலில் சிக்கினார்களா அல்லது வேறு எங்காவது தொடர்பு கொள்ள முடியாமல் உள்ளார்களா என்ற கவலையில் உள்ளனர்.

* மகாகும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் ரத்து
மகாகும்பமேளாவில் இன்று(நேற்று) முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை விவிஐபி எனப்படும் அதிமுக்கிய பிரமுகர்களுக்கு சிறப்பு அனுமதி சீட்டு(பாஸ்) வழங்குவதை ரத்து செய்து முதல்வர் ஆதித்ய நாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், சில வழிகாட்டு நெறிமுறைகளையும் முதல்வர் அறிவித்துள்ளார்.

The post உபியில் 30 பக்தர்கள் பலியான மகா கும்பமேளா நெரிசல் விசாரணை குழு அமைப்பு: ஒரு மாதத்தில் அறிக்கை தர உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article