அயோத்தி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மில்கிபூர் சட்டப்பேரவைக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் அமோக வெற்றி பெற்றார். உத்தரப்பிரதேச மாநிலம் மில்கிபூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் பாஜ வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் 29 சுற்றுகள் எண்ணிக்கை முடிவில், 1.46 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சியின் அஜித் பிரசாத் 84,687 வாக்குகளுடன் 2ம் இடம் பெற்றார்.
இத்தேர்தலில் சமாஜ்வாடிக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் போட்டியிடவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடாமல் விலகியது. அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவை தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்தி சமாஜ்வாடியின் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய நிலையில் அத்தொகுதியில் பாஜவின் தோல்வி பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. எம்எல்ஏவாக இருந்த அவதேஷ் பிரசாத் எம்பியானதைத் தொடர்ந்து அவரது மில்கிபூர் தொகுதி காலியானது. அத்தொகுதியை சமாஜ்வாடியிடமிருந்து கைப்பற்றுவதை கவுரவப்பிரச்னையாக பாஜ கருதியது. இந்த நிலையில், இங்கு நடந்த இடைத்தேர்தலில் அவதேஷ் பிரசாத்தின் மகன் அஜித் பிரசாத்தை சமாஜ்வாடி களமிறக்கியது. தற்போது அவரை வென்று மில்கிபூரை பாஜ கைப்பற்றி உள்ளது.
* மோசடி வெற்றி: அகிலேஷ்
தேர்தல் முடிவு அறிவிப்புக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நேர்வழியில் வெல்ல முடியாது என்பதை மக்களவை தேர்தல் மூலம் உணர்ந்த பாஜ தேர்தல் ஆணையத்தை தவறாக பயன்படுத்தி மோசடி செய்து வெற்றி பெற்றுள்ளது’’ என்றார்.
The post உபி இடைத்தேர்தலில் பாஜ அமோக வெற்றி appeared first on Dinakaran.