உன்னுடைய எதிர்காலத்தை நீயே உருவாக்கு!

1 day ago 2

உன்னுடைய எதிர்காலத்தை நீயே உருவாக்கு! ஏற்கனவே நடந்து முடிந்ததை குறித்து வருந்தி நிற்காதே. எல்லையற்ற எதிர்காலம் உன் முன்னால் விரிந்திருக்கின்றது. உன்னுடைய ஒவ்வொரு சொல்லும்,செயலும், சிந்தனையும் அதற்குத் தகுந்த பலனைத் தரும் வகையில் உன் மனதில் இடம்பெறும் என்பதை எப்போதும் நீ நினைவில் வைத்திருக்க வேண்டும்.உன்னுடைய தீய எண்ணங்களும், செயல்களும் புலிகளைப் போல் உன் மேல் பாய்வதற்குத் தயாராக இருக்கின்றன. உன்னுடைய நல்ல எண்ணங்களும் செயல்களும் ஓராயிரம் தேவதைகளின் ஆற்றலுடன் உன்னை எப்போதும் நிரந்தரமாகப் பாதுகாப்பதற்குத் தயாராக இருக்கின்றன. இதை ‘‘நீ எப்போதும் உன் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.பேரீச்சை மரங்கள் இரண்டு பக்கம் பக்கமாகவே வளர்ந்து இருந்தன. அதில் ஒரு மரம் பழங்கள் நிறைய கொண்டிருந்தது. இன்னொரு மரமோ ஒரு பூவோ, பழமோ காய்க்காமல் இருந்தது பேரீச்சம் பழங்கள் நிறைந்த மரத்தையே சுற்றி மக்களும், பறவைகளும் வந்தனர். சிலர் கல்லால் அடித்தும், சிலர் தடியால் அடித்தும் பழங்களைப் பறித்துச் சென்றனர். பறவைகள் பறந்து வந்து மரத்தின் மீது அமர்ந்து கொத்திப் புசித்தன. கொத்துக் கொத்தாக பழுத்த பழங்களுடன் காட்சியளித்த மரம் அவையாவும் பறிக்கப்பட்டதும், அது மொட்டை மரம் போல் கல்லடிபட்டு தோற்றமளித்தது. ஆனால் காய்க்காத மரமோ எந்த பறவையின், மனிதனின் பாதிப்பும் இல்லாமல் சட்டை கலையாத சோம்பறியைப் போல கருமியைப் போல நின்றிருந்தது.பழங்களைக் கொடுத்துவிட்டு நின்ற மரத்தைப் பார்த்துச் சொன்னது. இப்படி பழங்களை பறிகொடுத்து கல்லடி படுவதற்குக் காரணம் நீயேதான். ஏதோ மக்களுக்குப் பழங்களைத் தருவதில் தான் சந்தோஷமே இருக்கிறது. அதுதான் பிறவியின் பயன் என்பாபே.. இப்போது பார்த்தாயா உன் நிலைமையை! உன்னிடம் இருந்ததைப் பறித்து உன்னைக் காயம் பட வைத்து விட்டார்கள். என்னைப் பார்! எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. சின்ன கல் கூட என் மீது படவில்லை என்றது காய்க்காத மரம்.

உண்மைதான், சீர்குலையாமல் இருக்கிறாய் நீ. ஆனால் இந்த உலகத்திற்கு உன்னுடைய பங்களிப்பு என்ன,? கொஞ்சம் சொல்லு பார்ப்போம்? கனி தரும் மரம் திரும்பி கேட்டதும் காய்க்காத மரம் ஊமையானது.கல்லடி பட்டாலும் பரவாயில்லை என கனிகளைக் கொடுக்கும் மரம் போல இருப்பதுதான் தன்னலம் இல்லாத மனிதர்களின் உழைப்பு. அந்த உழைப்பு அவர்களுக்கு சந்தோஷம் கொடுப்பதோடு, சந்தோஷத்தைப் பரிமாறிச் செல்லும் வாழ்வு மகத்தானது என்பதை உணர்ந்தால் மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடும். நமக்குத் தெரிந்த நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கும்போது தான் நம்முடைய வாழ்க்கை மகத்தானதாக மாறுகிறது. இதற்கு உதாரணமாய் இந்த சாதனைப் பெண்ணைச் சொல்லலாம்.கொல்கத்தாவைச் சேர்ந்த சஹேலி சாட்டர்ஜி டிஜிட்டல் உலகில், குறிப்பாக சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கில் சாதிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய நபர்.வெறும் 110 ரூபாய் சம்பளத்தில் தொடங்கும் அவரது கதை, டிஜிட்டல் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக மாறியிருக்கிறது. அதற்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி, அர்ப்பணிப்பு வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. சஹேலியின் சாதனைக் கதை வெறும் எண்களைப் பற்றியது மட்டுமல்ல என்றாலும், ரூ.110-ல் தொடங்கி அவரது தொழில் தற்போது அவரின் ஆண்டு வருமானம் ரூ.1 கோடியே 64 லட்சம் வரை உயர்ந்து உள்ளது.சஹேலி சாட்டர்ஜி பள்ளிப் படிப்பை முடித்ததும் எல்லோரும் ஐஐடி, ஐஐஎம் அல்லது என்ஐடி என ஓட, தனது 18 வயதில் இவற்றில் சேரத் தகுதி இருந்தும், வழக்கமான பாதைகளில் இருந்து விலகி டிஜிட்டல் தொழில்முனைவோர் உலகில் நுழையத் தீர்மானித்தார். கொல்கத்தாவில் உள்ள பெத்துன் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு பெற்றதில் இருந்து அவரது வாழ்க்கை தொடங்கியது. கல்லூரி முடிந்த பின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் நுழைந்தார்.

சஹேலியின் டிஜிட்டல் பயணம் அவரது தகவலமைப்பு மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்று. டிஜிட்டல் மார்க்கெட்டிங் உலகில் கன்டென்ட் எழுதுவதில் தொடங்கி விரைவில் மார்க்கெட்டிங் என்ற முக்கிய இடத்தைப் பிடித்தார். தொடர்ந்து தனது தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் தனது டிஜிட்டல் தடயத்தின் விரிவாக்கமாக தனக்கென ஒரு பிராண்டையும் நிறுவினார். அது தான் ஆம்பிஃபெம் (AmbiFem). இது டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சி.பெண்களின் லட்சியம் மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும் வகையில் ஆம்பிஃபெம் எனப் பெயரிடப்பட்ட இந்நிறுவனம் சஹேலியின் விஷனுக்கு (vision) சான்றாக அமைந்தது.சோஷியல் மீடியா மார்க்கெட்டிங், அது தொடர்பான ஆலோசனைகள், தனிப்பட்ட பிராண்டுகளை நிர்வகிப்பது, இன்ஃப்ளூயன்சர்களுக்கான சேவைகளை வழங்கிவருகிறது இந்த ஆம்பிஃபெம். இவர்களுக்கான பெய்டு புரோமோஷன்கள் தொடங்கி அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவது என ஆம்பிஃபெம் மூலம் சஹேலி டிஜிட்டல் சந்தையில் தனது திறமையை வெளிப் படுத்தி வருகிறார். இதனால் குறுகிய காலத்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்டவராக மாறினார்.

சஹேலி தனது தொழில்முனைவோர் பயணத்தில் தன்னுடைய வளர்ச்சியைத் தாண்டி, தனது அறிவை மற்றவர்களுக்கு அளிப்பதிலும் கவனம் செலுத்தினார். இதற்காக அவர் தொடங்கியது தான் ஃப்ரீலான்ஸ் 101 (Freelance 101) அகாடமி.இந்த அகாடமி மூலம் தன்னைப் போன்று டிஜிட்டல் துறையில் முன்னேறத் துடிப்பவர்களுக்குத் தனது அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கிறார். டிஜிட்டல் உலகில் எவ்வாறு காலூன்றுவது என்பதில் தொடங்கி அத்துறையில் செழிப்பான வளர்ச்சியை எட்டுவது வரை ஃப்ரீலான்ஸர்களுக்கு சஹேலி வழிகாட்டுகிறார். சஹேலியின் இந்த அணுகுமுறைக்குக் காரணம், தனது அறிவைப் பகிர்ந்தளிப்பது மட்டுமல்ல, தன்னைப் போன்ற தலைமைத்துவம் மற்றும் நிபுணத்துவம் கொண்ட சமூகத்தை வளர்ப்பதே தனது லட்சியமாகக் கொண்டு செயல்படுகின்றார்.அவரின் இந்த எண்ணம் அவரின் பணிகளில் எதிரொலிக்கிறது. டிஜிட்டல் தொழில்முனைவோரின் சோதனைகளை எதிர்கொண்டு தனது திறமைகளை வளர்த்த சமயத்தில் சஹேலி, டிஜிட்டல் உலகில் பெண்களுக்கு எதிரான விரோதப் போக்கையும் அவர் எதிர்கொள்ளவும் செய்தார். எனினும், தனது அர்ப்பணிப்பு மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக டிஜிட்டல் தொழில்முனைவோர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் தனது பயணத்தைத் தன்னம்பிக்கையடன் மாற்றினார்.சஹேலிக்கு உலகளவில் தடம் பதிக்கும் திறமையும், வளமும் இருந்தபோதும், அவரது சொந்த ஊரான கொல்கத்தாவை தாண்டிச் செல்ல அவருக்கு மனமில்லை. இது கொல்கத்தா நகரம் மற்றும் அதன் கலாச்சாரத்தின் மீதான சஹேலியின் அன்பைப் பிரதிபலிக்கிறது.

டெக் தொழில்நுட்பங்களுக்குச் சற்று பின்தங்கிய நகரமாக ஸ்டார்ட் அப்களுக்கான மையமாக கொல்கத்தா இல்லாவிட்டாலும் சஹேலிக்கு கொல்கத்தா மீது தீராக் காதல். கொல்கத்தாவே அவருக்கான உத்வேகத்தையும், அவரது பயணத்துக்கான தொடக்கத்தையும் கொடுத்தது. அதனால்தான் கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறார் சஹேலி. புதிய சிந்தனையுடன் தன்னைத் தொழில் முனைவோராக மாற்றிக் கொண்டு, தொழில் முனைவோராக வேண்டும் என்று துடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகிறார் சாதனை மங்கை சஹேலி என்பதில் ஐயமில்லை.

 

The post உன்னுடைய எதிர்காலத்தை நீயே உருவாக்கு! appeared first on Dinakaran.

Read Entire Article