உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளை உடைத்து மர்ம நபர்கள் அட்டகாசம்

7 hours ago 4

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நகைகள், பணம், பட்டுப்புடவை, குத்து விளக்கை மர்ம நபர்கள் அள்ளி சென்றனர்; புதிய பைக்கையும் திருடி சென்றனர். அந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சோமநாதபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் முனியம்மாள் (72). தனியாக வசித்து வருகிறார்.

இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர், நேற்றிரவு நைசாக வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 1 பவுன் நகையை திருடி சென்றுள்ளனர். இதேபோன்று இதே கிராமத்தில் உள்ள முத்துராமபிள்ளை தெருவை சேர்ந்தவர் ருக்மணி (55). இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தார்.

இவரது வீட்டின் பூட்டையும் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் இந்த வீட்டின் அருகே வசித்து வரும் மூதாட்டி நீலாவதி (75) என்பவரது வீட்டையும் உடைத்து 4 குத்து விளக்குகள், ரூ.5000 ரொக்கப்பணம் மற்றும் பீரோவில் இருந்த 2 பட்டுப்புடவைகள் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் திருடினர். தவிர, கெங்கன் (52) என்பவரது புதிய பைக்கையும் திருடி சென்றனர். இன்று காலையில் அப்பகுதி மக்கள் பார்த்தபோதுதான் வீடுகளை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது மற்றும் பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்ற விவகாரம் தெரியவந்ததால் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், உத்திரமேரூர் போலீசாருக்கு புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

The post உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளை உடைத்து மர்ம நபர்கள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Read Entire Article