
கோரக்பூர்,
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் பத்ரவுனா பகுதியை சேர்ந்தவர்கள், கத்தாவில் நடக்கும் ஒரு திருமணத்துக்கு நள்ளிரவில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் கார் சுக்லா புஜவுலி என்ற இடம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் உடனடியாக அந்த பகுதியில் உள்ள மக்கள் உதவியுடன் காருக்குள் சிக்கி இருந்த காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.