
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா மற்றும் மனா பாஸ் இடையேயான பகுதியில் நேற்று அதிகாலை பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் எல்லை சாலைகள் அமைப்பு தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு முகாம் மீது பனிக்குவியல் விழுந்தது. இதில் முகாமில் இருந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரோடு பனியில் புதைந்தனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. இதுப்பற்றிய தகவல் கிடைத்ததும் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர். கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் அவர்கள் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்களும், ராணுவ வீரர்களும் மீட்பு பணியில் களம் இறக்கப்பட்டனர். அவர்கள் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக பனிச்சரிவில் சிக்கிய 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக மனா கிராமத்தில் உள்ள இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை முகாமுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கடும் சவால்களுக்கு மத்தியில் மீட்பு பணி நடைபெற்றது.
எனினும், இந்த பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 5 பேரை காணவில்லை. அவர்களின் தேடும் பணியில் மீட்பு குழுக்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.