![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35697671-national-02.webp)
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் லிசாரி கேட் பகுதியை சேர்ந்த மொயீன், அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆகிய 5 பேர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மொயீனின் உறவினரான ஜமீல் ஹுசைன் என்ற நபரை போலீசார் தேடி வந்தனர்.
ஜமீல் ஹுசைன் மீது டெல்லி மற்றும் தானேவில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த கொலை வழக்கில் ஜமீல் ஹுசைனை போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். அவரை பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மீரட் பகுதியில் ஜமீல் ஹுசைன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி இன்று காலை போலீசார் ஜமீல் ஹுசைனின் இருப்பிடத்தை நெருங்கியபோது, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.
அப்போது போலீசார் நடத்திய என்கவுன்டரில் ஜமீல் ஹுசைன் சுட்டுக்கொல்லப்பட்டார் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் மற்றும் சொத்து விவகாரத்தில் குடும்பத்திற்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜமீல் ஹுசைன் தனது உறவினர்களான 5 பேரை கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.