மூணாறு, ஏப். 26: மூணாறு சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் வனவிலங்குகள் அடிக்கடி உலாவுவதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா தலமான மூணாறு வனப்பகுதிகளால் சூழ்ந்த பகுதி. இங்கு பெரும்பாலான தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து தங்களது பொருளாதார வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டி தேயிலை தோட்டங்கள் உள்ளதால் அருகாமையில் வசிக்கும் மக்கள் காட்டு எருமை, யானை, புலி போன்ற வன விலங்குகளால் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் சில மாதங்களாக மூணாறு சுற்றி உள்ள எஸ்டேட் பகுதிகளில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உலா வரும் காட்டு யானை மற்றும் காட்டு எருமைகளால் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நல்லதண்ணி எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் ஒற்றை காட்டு எருமை தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகே சுற்றி திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு காட்டெருமையை விரட்ட முயற்சித்தனர். ஆனால், நீண்ட நேரம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்திய காட்டு எருமை புற்களை மேய்ந்து கொண்டு சாதாரணமாக காட்டுக்குள் சென்றது.
இந்த ஒற்றை காட்டு எருமையை பிடித்து வனப்பகுதிகள் கொண்டு சென்று விட வேண்டும் என்று பலமுறை வனத்துறை அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க வனத்துறை எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
The post உத்தமபாளையத்தில் குடியிருப்புகளுக்குள் வனவிலங்குகள் உலா அச்சத்தில் எஸ்டேட் தொழிலாளர்கள் appeared first on Dinakaran.