உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வான 246 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

1 week ago 3

சென்னை: டி.என்.பி.எஸ்.சி மூலம் உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வான 246 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு வாயிலாக பல்வேறு துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கான தேர்விற்கு கடந்தாண்டு அக்.13ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதன்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் 96 நபர்களும், பொதுப்பணித் துறையில் 42 நபர்களும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் 52 நபர்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் 18 நபர்களும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 38 நபர்களும், என மொத்தம் 246 நபர்கள் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20 நபர்களுக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் முருகானந்தம் , பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வான 246 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article