சென்னை: அமைச்சர் உதயநிதியின் செயல்பாடுகள் கட்சியின் வளர்ச்சிக்கும், ஆட்சித் திறன் மூலமாக தமிழகத்தின் வளர்ச்சிக்கும் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, அவருக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “பவள விழாவைக் கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தை ஆறாவது முறையாக ஆட்சி செய்து வருகிறது. திமுக கரங்களில் தமிழக மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கிய போதெல்லாம் நிறைவேற்றிக் காட்டிய தொலைநோக்குத் திட்டங்களின் மூலமாக நாம் அடைந்த வளர்ச்சிதான், இன்று நாம் காணும் நவீன தமிழகம். இன்றைய தினம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம். அந்த வளர்ச்சியின் மூலமாக மக்கள் பயனடைந்து வருவதையும் நேரடியாகப் பார்த்து வருகிறோம்.