உதயநிதி ஸ்டாலின் உடை விவகாரம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

2 months ago 14

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் தமிழ் கலாசார உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், சேலையூரைச் சேர்ந்த வக்கீல் சத்தியகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க., தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சியை பிடித்தது. அப்போது தி.மு.க., தலைவராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த அறிஞர் அண்ணா, தங்கள் கட்சி நிர்வாகிகள் தமிழ் கலாசாரப்படி உடை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரை தொடர்ந்து முதல்-அமைச்சர் பதவிக்கு வந்த கருணாநிதி அதை பின்பற்றினார். தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தமிழ் கலாசார உடை அணிந்து வருகிறார். 2021-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 2022-ம் ஆண்டு அமைச்சராக பதவி ஏற்றார். தற்போது கடந்த செப்டம்பர் மாதம் முதல் அவர் துணை முதல்-அமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஆனால், தமிழ் கலாசாரப்படி உடை அணிவது இல்லை. சாதாரண உடையான ஜீன்ஸ், டி.சர்ட் அணிந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

தலைமைச் செயலகம் ஊழியர்களுக்கு உடை கட்டுப்பாட்டு விதிகளை வகுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, துணை முதல்-அமைச்சர் இதுபோல உடை அணியக்கூடாது. ஆனால், ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட் அணிந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அவர் இந்த மாநில பிரதிநிதியாக திகழ்கிறார். அப்படிப்பட்ட மதிப்புக்குரிய பதவியை வகித்துக் கொண்டு, இதுபோல சாதாரண உடைகளை அணியக்கூடாது. எனவே, 2019-ம் ஆண்டு அரசாணையின்படி அரசு விழாக்களில் பங்கேற்கும்போது தமிழ் கலாசார மற்றும் முறையான உடைகளை அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு மீதான வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி சர்ட் அணிவது அரசாணைக்கு எதிரானது என மனுதாரர் தெரிவித்தார்.

இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியர்களுக்கு தான் பொருந்தும் என்று விளக்கமளித்தார். இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா..? டி சர்ட் கேஷுவல் உடையா..? அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா..? என பதில்மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Read Entire Article