
சென்னை,
திருவாரூரில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகாவில் உள்ள தில்லைவிளாகம், உதயமார்த்தாண்டபுரம், தொண்டியக்காடு போன்ற கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள இறால் பண்ணைகளினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்று சென்னை ஐகோர்ட்டில், தில்லைவிளாகம் கிராம பஞ்சாயத்து தலைவர் யோகநாதன் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில்,
இறால் வளர்ப்புக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களால், கிராமங்களில் உள்ள நீர் நிலைகள் பாதிக்கப்படுகிறது.உலக பிரசித்தி பெற்ற உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் பறவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால், ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில், விவசாய நிலங்களுக்கு அருகே உள்ள இறால் பண்ணைகளை அகற்ற கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கடலோர மீன்வளர்ப்பு ஆணையச் சட்டத்தின்படி உரிமம் பெற்றவர்கள் மட்டுமே கடலோரப்பகுதியில் இறால் பண்ணைகளை நடத்த முடியும். அதுவும் மாவட்ட அளவில் செயல்படும் கமிட்டியிடமும் முறையாக பதிவு செய்யவேண்டும் என்று கூறியுள்ளது.
எனவே, மாவட்ட அளவிலான கமிட்டியின் தலைவராக இருக்கும் கலெக்டர், தில்லைவிளாகம் உள்ளிட்ட பகுதியில் ஆய்வுகளை செய்யவேண்டும். அங்கு முறையான உரிமம் இல்லாமலும், அனுமதி பெறாமலும் செயல்படும் இறால் பண்ணைகளை உடனடியாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிமம் வழங்கும்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறிய இறால் பண்ணைகள் மீதும் இதுபோல நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் 12 வாரத்துக்குள் முடிக்க வேண்டும். அவ்வாறு எடுத்த நடவடிக்கைகளை மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.