உதயநிதி முன்னிலையில் மணமகளுக்கு தாலி கட்ட முயன்ற தாய் - மேடையில் சிரிப்பலை

2 hours ago 2

சென்னை,

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 48 இணையர்களுக்கு திருமண விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில், 48 மணமக்களுக்கும் தலா ரூ. 25 ஆயிரம் மொய், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் மிக்சி என 30 வகையான பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகளும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் சூர்யகுமார் - குணவதி என்ற ஜோடிக்கு உதயநிதி ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். அப்போது திருமண பரபரப்பில் இருந்த மணமகளின் தாயார் உதயநிதியிடம் இருந்து தாலியை பெற்று மணமகனுக்குப் பதில் தானே மணமகளுக்குத் தாலி கட்ட முயன்றார். இதைப் பார்த்து பதறிய உதயநிதி, "என்னம்மா, நீங்க தாலி கட்டுறீங்க" எனக் கேட்டு சிரித்தார். தமது உணர்ச்சிமயமான செயலை ஒரு விநாடி சுதாரித்துக் கொண்ட தாயும் மணமகன் கையில் தர, அவர் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். இந்த சம்பவம் மேடையில் மட்டும் அல்ல, அதை கண்டு கொண்டிருந்த பலரிடையேயும் சிரிப்பை வரவழைத்தது.

இதனையடுத்து அந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "இங்கு நடைபெற்றுள்ள சில திருமணங்கள் காதல் திருமணங்கள் என்று சொன்னார்கள். சரி காதல் பண்ணிட்டீங்க.. திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்துவிட்டோம். இனிமேல் தான் நீங்கள் அதிகமாக காதலிக்க வேண்டும். ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து, நண்பர்களாக இருந்து வாழ வேண்டும். ஒரு மணமகன் 5 முடிச்சுகளைப் போட்டார். "என்னப்பா கட்டிக்கிட்டே இருக்க..?" எனக் கேட்டேன். ஸ்ட்ராங்கா கட்டணும்ணே என்றார். திருமண பதற்றத்திலா, அவசரத்திலா எனத் தெரியவில்லை.

இங்கு ஒரு சில மணமகன்கள் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டார்கள். ஒரு மணமகன் தனக்கு தானே தாலி கட்டிக் கொள்ள முயற்சி செய்தார். இது தவறு கிடையாது. பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. பெரியார் சொன்னதுதான்" என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். 

Read Entire Article