
சென்னை,
கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி ஆண்டுந்தோறும் நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 127-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கண்காட்சியில், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 40 ஆயிரம் வண்ண மலர் மாடங்கள் இடம் பெற்றுள்ளன. பண்டைய தமிழ் அரசர்களின் வாழ்வியல் முறைகளை வெளிக்காட்டும் வகையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மலர்களை கொண்டு 70 அடி நீளம், 20 அடி உயரத்தில் பிரமாண்ட நுழைவுவாயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரோஜா, சாமந்தி, கார்னேசன் போன்ற 2 லட்சம் மலர்கள் மூலம் 75 அடி நீளம், 25 அடி உயரத்தில் பண்டைய அரசர் கால அரண்மனை அமைப்பும் பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரம், 35 அடி நீளத்தில் 50 ஆயிரத்து 400 சாமந்தி மலர்கள் மூலம் அன்னபட்சி, 4 ஆயிரம் மலர்த்தொட்டிகள், 35 ஆயிரம் சாமந்தி, ரோஜா பூக்கள் மூலம் கல்லணை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர்கள் மூலம் பண்டைய கால சிம்மாசனம், ஊஞ்சல், கண்ணாடி, இசை கருவிகள், பீரங்கி, யானை, புலி போன்ற அலங்கார வடிவமைப்புகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இடம் பெற்றுள்ளது. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள இந்த மலர் அலங்கார வடிவமைப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்து ரசித்தார். அப்போது அவர், மலர்களால் அலங்கரிக்கப்பட சிம்மாசனத்தில் அமர்ந்து உற்சாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். நேற்று தொடங்கிய ஊட்டி மலர் கண்காட்சி 25-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நாட்களில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரூ.24 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பெரணி இல்லம் புதுப்பிக்கப்பட்டது. இந்த இல்லத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 2ஆவது நாள் மலர் கண்காட்சியை 16,580 பேர் பார்வையிட்டதாக தோட்டக் கலைத் துறை தகவல் தெரிவித்துள்ளது.