உண்மையை மறைத்து பொது நல வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ.20 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி

2 months ago 9

சென்னை: திருவள்ளுர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிலமாக வகை மாற்றம் செய்து 2007 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன், தன் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதாகவும், நிலத்தை அளவீடு செய்து அது வனப்பகுதி நிலம் என அறிவிப்புப் பலகை வைக்க உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, 2007 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து 17 ஆண்டுகளுக்குப் பின் வழக்கை தாக்கல் செய்ததற்கு உரிய காரணங்கள் விளக்கப்படவில்லை. மனுதாரரின் வயது, வருமானம் குறித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம் வகை மாற்றம் குறித்த உண்மைகளை மறைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி, 20 லட்சம் ரூபாய் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அபராதத் தொகை 20 லட்சம் ரூபாயில், இந்த வழக்கால் பாதிக்கப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாயும், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு 10 லட்சம் ரூபாயும் நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஓராண்டுக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி பொது நல வழக்கும் தாக்கல் செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

The post உண்மையை மறைத்து பொது நல வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ.20 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article