இளைஞர்களின் மனவலிமையைச் சோதிப்பதற்காக பத்து இளைஞர்களை ஒரு அறையில் அமர வைத்தார்கள். அந்த அறையில் இருந்த கரும்பலகையில் மூன்று கோடுகள் வரையப்பட்டிருந்தன. நீளமாக ஒன்று, அதைவிடச் சிறிதாக இன்னொன்று, மிகவும் சிறிதாக மூன்றாவது.அந்த அறையிலிருந்து பத்து இளைஞர்களில் ஒன்பது பேருக்கு ரகசியமாய் ஒரு செய்தி தரப்பட்டிருந்தது. வரையப்பட்டிருக்கும் கோடுகளில் பெரிய கோடு எது என்று கேட்டால் இரண்டாவது பெரிய கோட்டைக் காட்ட வேண்டும் என்பதே அது. ஆனால், இந்த ரகசிய ஏற்பாடு பத்தாவது நபருக்குத் தெரியப்படுத்தப்படவில்லை .பயிற்சியாளர் வந்து அவர்கள் முன் நின்றார். இந்த கரும்பலகையில் வரையப்பட்டிருக்கும் கோடுகளில் பெரிய கோடு எது என்று கேட்டார். அறையிலிருந்து அனைவருமே இரண்டாவது பெரிய கோட்டைக் காட்டி அது தான் பெரிய கோடு என்றார்கள்.
பத்தாவது நபருக்கு ஆச்சரியம்! இதெப்படி முதல் கோடுதானே பெரியது? ஏன் இரண்டாவது கோட்டைக் காட்டுகிறார்கள்? அல்லது என் பார்வையில் ஏதேனும் திடீர் பழுதா? குழம்பிக் கொண்டிருந்தவரைப் பார்த்து பயிற்சியாளர் கேட்டார்.! ‘‘எது பெரிய கோடு? முதலாவதா, இரண்டாவதா அல்லது மூன்றாவது கோடா?’’ அந்த இளைஞர் சில வினாடிகள் மௌனமாய் நின்றான். பின் சொன்னான். இரண்டாவது கோடுதான் பெரியது.!இன்றைய இளைஞர்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் பல வேளைகளில் வருவதில்லை. கூடியிருப்பவர்கள் தவறு செய்தால் அந்த தவறோடு ஒன்றிப் போய்விடும் பழக்கம் உடையவர்களாகத்தான் அவர்கள் பலவேளைகளில் இருக்கிறார்கள். தம்முடைய செயல்களை நிர்ணயம் செய்ய அடுத்தவர்களின் செயல்களை ஒப்பீடு செய்கிறார்கள். சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் ஏதேனும் ஒரு பைனான்சியரிடம் பணம் போட்டிருந்தால் இவர்களும் போடுகிறார்கள். எல்லோரும் சேர்ந்து தோற்றுப் போவது தனியாய் தோற்றுப் போவதை விட நல்லது என்று கருதுகிறார்கள். இந்த தயக்கமும், உண்மையை உண்மை என்றுதானே ஒப்புக் கொள்ள மறுக்கின்ற மன பலவீனமும் சமுதாயத்தின் சரிவுகள்.
உண்மையை உண்மை என்று சொல்லும் தைரியம் ஒருவகை என்றால், தவறிழைத்தால் நான் தவறு செய்தேன் என்று ஒப்புக் கொள்ளுதல் அதைவிடப் பெரிய நிலை. பிறருடைய விமர்சன அம்புகளோ, ஏளன வார்த்தைகளோ நம்மை சவக்குழிக்கு அனுப்புவதில்லை என்னும் உள்ள உறுதி உடையவர்களே நிமிர்ந்து நிற்கிறார்கள்.நாம் எப்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம்? நம்மைச் சுற்றி இருப்பவர்கள் செய்வதை நாமும் செய்கிறோமா? இல்லை எது சிறந்ததோ, எது சரியானதோ அதைச் செய்கிறோமா?. சுற்றியிருப்பவர்கள் தவறான திசையை நோக்கிச் செல்கிறார்கள் எனில் சரியான திசை தெரிந்திருந்தாலும் நாம் தவறான திசைக்குச் செல்லத் துணிவோமா? இயேசு துணிச்சலாய் இருந்தார். ஆலயத்தில் கடைகளை விரித்திருத்தவர்களிடம் ‘‘இது அனைவருக்கும் ஜெப இல்லம். கடைவிரிக்கும் இடமல்ல’’ என்று கர்ஜித்தார். இதுதான் உண்மைக்குச் சான்று பகரும் துணிச்சல். இதைத்தான் கடவுள் நம்மிடமும் எதிர்பார்க்கிறார். ‘‘உண்மைக்குச் சான்று பகர்தலே எனது பணி’’ என்ற இறை வாக்குக்கு ஏற்ப துணிந்து நிற்க முயல்வோம். கூடியிருப்பவர்கள் விஷம் குடிக்கிறார்கள் என்பதற்காக நாமும் குடிக்க வேண்டியதில்லை. எது நல்லது எது கெட்டது என்பதைப் பகுத்தறியும் வலிமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எனவே இந்த ஆண்டு முழுவதும் உண்மையை உண்மை என்று சொல்லும் மன தைரியத்துடன் செயல்படுவோம்!
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.
The post உண்மையை உண்மை என்று சொல்லும் தைரியம் appeared first on Dinakaran.