*பண்டிகை காலத்தில் அபராதமா?- மக்கள் கேள்வி
புதுச்சேரி : புதுச்சேரி பிராந்தியத்தில் ஹெல்மெட் கட்டாயம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் விதித்தனர். புதுச்சேரியில் ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் அதிகரித்து இருக்கிறது.
புதுச்சேரியில் சாலை விபத்து 8 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதில் உயிரிழப்புகள் 15 முதல் 20% வரை அதிகரித்துள்ளது. இதனை நாடு முழுவதும் ஒப்பிடுகையில், புதுச்சேரியில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. இதில் இருசக்கர வாகன விபத்தில் கடந்த 2023ம் ஆண்டு 140 பேர் உயிரிழந்துள்ளனர். 2024ம் ஆண்டு 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் இந்தாண்டு உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த புதுச்சேரி போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர். அதன்படி புதுச்சேரியில் நேற்று முதல் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து நேற்று சாலையில் குறைந்த அளவிலான மக்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் சென்றனர். மேலும் பலர் ஹெல்மெட் அணியாமல் சென்றதை பார்க்க முடிந்தது. இதனிடையே கட்டாய ஹெல்மெட் அமலுக்கு வந்த பிறகு, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே போக்குவரத்து சீனியர் எஸ்.பி. பிரவீன்குமார் திரிபாதி உத்தரவின்பேரில் கிழக்கு- வடக்கு எஸ்.பி. செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர்.
இதேபோல் மரப்பாலம் சந்திப்பு அருகே கிழக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர்.
தொடர்ந்து பாகூர், தவளக்குப்பம், வில்லியனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். அப்போது பண்டிகை காலத்தின்போது, அபராதம் விதிப்பாத? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனிடையே வாகன தணிக்கையின்போது ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு சீனியர் எஸ்.பி. பிரவீன் குமார் திரிபாதி ரோஜா பூ, சாக்லேட் மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டினார். மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை,ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.
ஹெல்மெட்டை சாலையில் போட்டு உடைத்த எஸ்.பி.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் சைக்கிளில் அணியக்கூடிய ஹெல்மெட்டை அணிந்து வந்தனர். அப்போது வாகன ஓட்டி ஒருவர் உடைந்த நிலையில் ஹெல்மெட் அணிந்து வந்தார். இதனை பார்த்து எஸ்.பி செல்வம், ஹெல்மெட்டை வாங்கி, சாலையில் போட்டு உடைத்து காண்பித்தார்.
மேலும் வாகனத்தில் தரமற்ற ஹெல்மெட் அணிந்த வந்த அனைவரையும், இதுபோன்று ஹெல்மெட்டை பயன்படுத்தக்கூடாது என்றும், தலை முழுவதும் மூடும் வகையில் உள்ள ஹெல்மெட்களை அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்.
தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளின் வாகனத்தில் போலீசார் ஸ்டிக்கர் ஒட்டினார். பின்னர் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
போலீசாரை கண்டதும் திரும்பி சென்ற வாகன ஓட்டிகள்
புதுச்சேரியில் ஹெல்மெட் கட்டாயம் அமலானதால் நேற்று பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கருவடிக்குப்பம் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கோட்டக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாமிபிள்ளை தோட்டம் சந்திப்பி அருகே போலீசாரை கண்டதும், பதறிய வாகன ஓட்டிகள் அவர்களிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக வந்த வழியிலேயே திருப்பி சென்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு தரமற்ற ஹெல்மெட்
புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளுக்காக வாடகை இருசக்கர வாகனம் கடைகள் அதிகமாக உள்ளது. இதனால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் நேராக வாடகை வாகன கடைக்கு சென்று, வாகனத்தை எடுத்துக்கொண்டு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வாகனம் எடுக்கும்போது, கடையின் உரிமையாளர்கள் தரமற்ற ஹெல்மெட் வழங்கி வருகின்றனர்.
இதனிடையே நேற்று வாகன சோதனையின்போது சுற்றுலா பயணிகள் பலர் தரமற்ற ஹெல்மெட்டை அணிந்து வருவதை சீனியர் எஸ்.பி. பிரவீன்குமார் திரிபாதி பார்த்தார். இதுபோன்று ஹெல்மெட் வழங்கும் இருசக்கர வாடகை கடைகளை கண்டுபிடித்து,ஹெல்மெட் வழங்குவதை ஒழுங்குபடுத்த வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
The post புதுவையில் கட்டாய ஹெல்மெட் அமலானது ஆர்வம் கட்டாத இருசக்கர வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.