ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்தூர வ்ரஜ ஸேவிதா
நாம் இதற்கு முந்தைய நாமாவான பண்டாஸுர வதோத்யுக்த ஸக்தி ஸேனா ஸமன்விதா என்பதில் பண்டாசுரனை வதம் செய்வதற்காக அம்பிகை தயாராகிறாள். அவள் எப்படி தயாராகிறாள் எனில் சக்தி சேனைகளோடு தயாராகிறாள். இந்த பண்டாசுரன் என்பவன் யார், அவனை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம் என்பதையெல்லாம் சென்ற நாமாவில் பார்த்தோம். இப்போது சக்தி சேனா சமன்விதா என்று சொல்லும்போது எண்ணற்ற சக்தி சேனைகளோடு அம்பிகை ஆவிர்பவிக்கிறாள் என்று பார்த்தோம். மகாராணியாக இருப்பதும் அம்பிகைதான், அந்த சேனைகளாக இருப்பதும் அம்பாள்தான். அந்த சேனைகளுக்குள் ஒவ்வொருவருமாக இருப்பதும் அம்பிகைதான் என்று பார்த்தோம்.
ஒரு மஹாராஜா போருக்கென்று வரும்போது அந்தப் போரில் படைகள் இருக்கும். சக்தி சேனா என்று சொல்லும்போது அதில் வெவ்வேறு விதமான படைகள் இருக்கும். அதை நான்கு படைகளாக சொல்வது வழக்கம். சதுர் அங்கம். குறிப்பாக யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை, காலாட் படை ஆகும். இதைத்தான் நாம், ரத கஜ துரக பதாதிகள் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். பெரிய ராஜாக்கள் வரும்போது ரத கஜ துரக பதாதிகளோடு வந்தார் என்று படித்திருப்போம். ஒரு சாதாரண ராஜாவுக்கே சதுர் அங்கங்கள் இருந்தால், பிரபஞ்சத்திற்கே நாயகியாக இருக்கக் கூடிய அம்பாளினுடைய சதுர் அங்கங்கள் பற்றி கேட்கவே வேண்டாம்.
இப்போது அந்த சதுர் அங்கத்தில் இருக்கக்கூடிய முதல் அங்கம் எதுவெனில் யானைப் படை. இந்த யானைப் படையான முதல் அங்கத்தைப் பற்றியதுதான் இந்த நாமா. அப்போது அம்பிகையிடம் நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பெரிய யானைப் படை ஒன்று இருக்கிறது. அந்தப் யானைப் படைக்கு தலைவி என்கிற இடத்தில் சம்பத்கரீ என்கிற தேவி இருக்கிறாள். சம்பத்கரீயே அம்பிகையினுடைய சொரூபம். தானே யானைப் படையின் தலைவியாக இருக்கும்போது சம்பத்கரீயாக இருக்கிறாள். சம்பத்கரீயின் தலைமையில் யானைப்படை இயங்குகிறது.
இப்போது இந்த நாமம் என்ன சொல்கிறதெனில், ஸம்பத்கரீ ஸமாரூட ஸிந்துர வ்ரஜ ஸேவிதா இதில் ஸிந்துர வ்ரஜம் என்று இருக்கிறது. ஸிந்தூரம் என்றால் யானை என்று அர்த்தம். ஸிந்துர வ்ரஜம் என்றால் யானைக் கூட்டம் என்று பொருள். வ்ரஜ ஸேவிதா என்றால் யானைக் கூட்டங்களால் சேவிக்கப்படுபவள் என்று அர்த்தம். அது எப்படிப்பட்ட யானைக் கூட்டங்களால் சேவிக்கப்படுகிறாள் எனில், சாதாரண யானைக் கூட்டங்கள் கிடையாது. சம்பத்கரீ சமாரூட – சம்பத்கரீ என்கிற தேவியினுடைய தலைமையில் இருக்கக் கூடிய யானைக் கூட்டங்களால் சேவிக்கப்பட்டவள்.
இதெல்லாம் இந்த நாமாவினுடைய வெளிப்படையான அர்த்தங்கள். இந்த சம்பத்கரீயைப் பற்றி நாம் இதற்கு முன்பு அம்பாளினுடைய ரூப வர்ணனையைச் சொல்லும்போது, அம்பாளினுடைய அங்குசத்தைப் பற்றிச் சொல்லும்போது க்ரோதாகாராங்குசோஜ்வலா… எனும் நாமாவில், அங்குசத்திலிருந்து ஆவிர்பவித்த தேவி யாரெனில் சம்பத்கரீ என்று பார்த்தோம்.
இப்போது அங்குசம் என்ன செய்யும். யானையை அடக்கக் கூடியது அங்குசம். எந்த அங்குசம் யானையை அடக்குகிறதோ அந்த அங்குசத்திலிருந்து தேவி ஆவிர்பவிக்கிறாள். அந்த தேவியையே யானைப் படைத் தலைவியாக்குகிறாள் அம்பாள். யானையை அடக்கக் கூடிய திறமை உள்ளவரைத்தானே யானைப்படைத் தலைவியாக்க முடியும். அம்பாளினுடைய கையில் இருக்கக் கூடியது அங்குசம். அந்த யானையை அடக்கக்கூடிய அங்குசத்திலிருந்து வந்தவள் சம்பத்கரீ. அந்த சம்பத்கரீயையே யானைப் படைக்குத் தலைவியாக்குகிறாள். இப்போது அந்த அங்குசத்தைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று பார்த்தோமானால், க்ரோதா காராங்குசோஜ்வலா… என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த அங்குசமானது எப்படிப்பட்டதெனில் க்ரோதமே வடிவான, கோபமே வடிவான அங்குசமாகும். இப்போது கோபமே வடிவான, க்ரோதாகாரமாக இருக்கக்கூடிய அங்குசத்திலிருந்து உண்டான இந்த சம்பத்கரீ தேவிதான் இந்த யானைகளை கட்டுப்படுத்துபவளாக இருக்கிறாள்.
இந்த சம்பத்கரீ தேவியானவள் நமக்கு என்ன காண்பித்துக் கொடுக்கிறாள். பண்டாசுர யுத்தம் ஆரம்பித்திருக்கிறது. இந்த பண்டாசுர யுத்தத்தில், சம்பத்கரீ தேவி யானைப்படை தலைவியாக இருக்கிறாள் என்பது சரிதான். புராணத்தில் அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நமக்குள் என்ன காண்பிக்கப்படுகிறது என்பது மிகவும் முக்கியமாகும். இங்கு internal ஆக பார்க்கும்போது, சம்பத்கரீ என்கிற பெயர் இருக்கிறதல்லவா… இது பொதுவாக என்ன சொல்ல வருகிறது. சம்பத் என்றாலே செல்வம், வளம் போன்றவற்றை குறிப்பிடுகிறது. செல்வ வளத்தோடு இருப்பதையே வாழ்வதையே சகல சம்பத்துடன் என்று சொல்கிறோம். ஒரு உயர்ந்த நிலையில் இருக்கக் கூடியது.
இப்போது இதற்கு முந்தைய நாமாவில் பண்டாசுரன் என்ன செய்கிறான் என்று பார்த்தோமானால், நம்முடைய இந்திரிய பலத்தை கவர்ந்து விடுகிறான் என்று பார்த்தான். அப்படி இந்திரியங்களின் (senses) பலத்தை கவர்வதால் என்ன ஆகிறதெனில், வெளிநோக்கி இந்திரியங்கள் போகாமல் இருக்கிறது என்று சொன்னாலும் கூட , இந்திரியங்களுக்கு பலம் இல்லாத பட்சத்தில் அது உள்நோக்கியும் போக முடியாது. மிகமிக முக்கியமான விஷயம். வெளிநோக்கி போவதற்கும் பலம் வேண்டும். உள்நோக்கிச் செல்லவும் பலம் வேண்டும். இன்னும் கேட்டால் வெளிநோக்கி செல்வது என்பது மிகவும் சுலபமானது. சாதாரணமாக அது வெளியேதான் செல்லும். ஆனால், உள்நோக்கிச் செல்லவே பெரிய பலம் தேவைப்படும். இந்தப் பட்சத்தில் வெளி நோக்கியும் போகாமல், உள் நோக்கியும் செல்லாமல் தடுத்து நிறுத்துகிறான் எனில் அது எப்பேற்பட்ட தடை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
உள்நோக்கித் திருப்புவதற்கு ஆத்ம பலம் மிகவும் முக்கியம். அப்போதுதான் அது உள்நோக்கித் திரும்பும். இப்போது இந்திரியங்களுடைய பலத்தையெல்லாம் கவர்ந்து கொள்கிறான். அப்போது, நம்மால் உள்நோக்கி திருப்ப முடியாது போய் விடுகிறது. இதுதான் பண்டாசுரன் செய்யக் கூடிய ஒரு குரூரமான ஒரு செயலாகும். இதனால்தான் அம்பாள் பண்டாசுரனை சம்ஹாரம் செய்யப் போகிறாள். அப்படி சம்ஹாரம் செய்யப் போவதற்கு முன்பு அம்பாள் என்ன செய்கிறாள் எனில், அவன் எந்த இந்திரியங்களுடைய பலத்தையெல்லாம் கவர்ந்தானோ அந்த இந்திரியங்களுக்கு பலம் கொடுக்க வேண்டும். அப்படி பலம் கொடுப்பதற்கு தேவி என்ன செய்கிறாள் எனில், சம்பத்கரீ தேவியாக அம்பாள் ஆவிர்பவிக்கிறாள். இந்த சம்பத்கரீ தேவியாக ஆவிர்பவித்து சம்பத்தை உண்டாக்குகிறாள். எதை வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இங்கு சம்பத் என்பதை நாம் வாழும் இந்த லௌகீக வாழ்க்கையில் உள்ள செல்வத்தில் தொடங்கி, தினப்படி நமக்கு வேண்டிய பொருட் செல்வமாகட்டும், தினப்படி வேண்டிய உணவிலிருந்து உடுத்தும் உடைகளிலிருந்து சின்னச் சின்ன விஷயங்களில் தொடங்கி பெரிய நிலை வரையில் அளிப்பாள். முதல் நிலையில் நமக்கு சம்பத் என்றால் செல்வம், வீடு, வாகனம், பொருட் செல்வம் என்றுதான் தோன்றும். ஆனால், அடுத்த நிலையில் என்ன தோன்றும். இதெல்லாம் இருந்தால் கூட மன நிம்மதி வேண்டும் என்று தோன்றும். அதற்கடுத்து போகும்போது இந்த மனநிம்மதிக்கு அறிவு காரணமாக இருக்கிறது. எனவே, இந்த அறிவுதான் சம்பத் என்று தோன்றும். இதற்கும் அடுத்து உடல்நலம்தான் சம்பத் என்று தோன்றும். இதற்கும் அடுத்து உடல்நலத்தோடு சுற்றியுள்ள மக்கள் நல்லவர்கள் வேண்டும் என்று தோன்றும். அதற்கடுத்து நல்லவர்கள் மட்டுமல்லாது சத்சங்கம் வேண்டுமென்று தோன்றும். அந்த சத்சங்கத்தினால் நாம் ஞானமடைய வேண்டுமென்று தோன்றும். அந்த ஞானத்தினால் நமக்கு ஆத்மானுபூதி அடைய வேண்டுமே அது இறுதியான சம்பத் என்று தோன்றும்.
லௌகீக வாழ்க்கையிலுள்ள செல்வத்தில் தொடங்கி இறுதியாக இருக்கக் கூடிய ஆத்மானுபூதி வரையிலும் இருப்பதுதான் சம்பத். இந்த சம்பத்தை அம்பாள் உருவாக்கும்போது என்ன செய்கிறாள். இங்கு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். இந்த இந்திரியங்களானது இந்த சம்பத்துகளை பார்க்கிறதல்லவா. அப்படி இந்த சம்பத்துகளை பார்க்கும்போது, இந்த சம்பத்துக்களால் இந்த இந்திரியங்களுக்கு சுகம் கிடைக்கிறது என்று தெரிகிறது. அது எந்த சம்பத்தாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது பொருட் செல்வமாகவோ அல்லது அறிவுச் செல்வமாகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நம்மோடு சுற்றியிருப்பவர்களாகவோ அல்லது சத்சங்கமாக இருக்கலாம்.
இதிலிருந்து ஏதோ ஒரு சுகத்தை அனுபவிக்கிறோம். இந்த சம்பத்துக்களை இந்த இந்திரியங்கள் வேண்டுகிறது. இப்போது இந்த சம்பத்கரீயாக அம்பாள் அங்கு ஆவிர்பவிக்கும்போது, இந்த இந்திரியங்களுக்கு அதனுடைய பலத்தை restore செய்கிறாள். எந்த பண்டாசுரன் பலத்தை அபகரித்தானோ, அந்த பலத்தை சம்பத்கரீ தேவி restore செய்கிறாள். அப்படி restore செய்யும்போது ஒவ்வொரு சம்பத்தும் ஒவ்வொரு யானை மாதிரி இருக்கிறது. அப்போது இந்த யானைக் கூட்டத்தை அம்பாள் காண்பிக்கிறாள். அப்போது ஒவ்வொரு சம்பத்தும் ஒரு சாதகனுக்கு பெரிய பெரிய விஷயமாக இருக்கிறது. அவரவருடைய வாழ்க்கையில் அவரவர்க்கு அது அது பெரிய விஷயமாக தெரிகிறது.
ஒரு குழந்தைக்கு விளையாட்டு பொம்மை கிடைப்பது பெரிய விஷயம். நாம் அதை தவறென்று சொல்ல முடியாது. நமக்கு அது அர்த்தமற்தாக இருக்கலாம். அது அந்தக் குழந்தைக்கு எவ்வளவு பெரிய விஷயமென்று அந்தக் குழந்தைக்குத்தான் தெரியும். அப்போது ஞானிகளுக்கு ஞானத்தை தவிர மற்ற எல்லாமே அர்த்தமற்றதாக ஆகிவிடும். ஆனால், இந்த எல்லா சம்பத்துமே, சிறிய விஷயங்களிலிருந்து பெரிய ஞானம் வரையிலும் அம்பாள் காண்பித்து அது ஒவ்வொன்றும் யானைகள் மாதிரி இருக்கிறது. அந்த யானைகளையெல்லாம் அடக்கக் கூடிய சம்பத்கரீயாக இருக்கிறாள். அதனால், நாம் பண்டாசுரனால் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுத் தருகிறாள்.
(சுழலும்)
The post உண்மையான செல்வத்தை அருளும் அம்பிகை appeared first on Dinakaran.