ஆர்.கே.பேட்டை: அய்யனேரி ஊராட்சியில் சாலையோரம் உள்ள பேருந்து நிழற்குடையின் பக்கவாட்டு தூண்களும் மேற்கூரையும் வலுவிழந்து, எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு நின்று பேருந்தில் செல்லும் பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இப்பேருந்து நிழற்குடையை அகற்றி, புதிதாக கட்டித்தர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், அய்யனேரி ஊராட்சியில் உள்ள அய்யனேரி காலனி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இக்கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என பல்வேறு தரப்பை சேர்ந்த மக்கள், இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையில் சோளிங்கர், திருத்தணி, விலாசபுரம், பரவத்தூர், மாம்பாக்க சத்திரம், கே.ஜி.கண்டிகை, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்கள் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். எனினும், இப்பேருந்து நிழற்குடை கடந்த சில ஆண்டுகளாக முறையான பராமரிப்பின்றி, தற்போது அதன் பக்கவாட்டு தூண்களும் சிமென்ட் கான்கிரீட் மேற்கூரைகளின் காரைகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகின்றன. மேலும், இப்பேருந்து நிழற்குடையின் பக்கவாட்டு சுவர்களில் ஏராளமான விரிசல்களுடன் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது.
பேருந்து நிழற்குடையை சுற்றிலும் முட்புதர் காடுகள் வளர்ந்துள்ளதால், அங்கு பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷப்பூச்சிகளும் படையெடுத்து வருகின்றன. அப்பேருந்து நிழற்குடை தற்போது மாடுகள் கட்டப்படும் இடமாக மாறிவிட்டது. இதனால் அப்பேருந்து நிழற்குடையில் நின்று பேருந்தில் ஏறிச்செல்லும் பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே, அய்யனேரி காலனியில் இடிந்து விழும் நிலையில் உள்ள பழுதான பேருந்து நிழற்குடையை முற்றிலும் அகற்றிவிட்டு, அங்கு புதிய இருக்கைகளுடன் கூடிய பேருந்து நிழற்குடையை அமைத்து தருவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post அய்யனேரி ஊராட்சியில் பயணிகளை அச்சுறுத்தும் நிழற்குடை: புதிதாக கட்டித்தர வலியுறுத்தல் appeared first on Dinakaran.